
எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்த அவருடைய பெயரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது நற்றிணை பதிப்பகம். கடந்த ஆண்டு அசோகமித்திரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு கநாசு விருதை பிரபஞ்சனுக்குக் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். ஒரு விழா வைத்து விருதை வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில் பிரபஞ்சனுக்கு உடல்நலக்குறைவேற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சைக்குப் பின் விடுதியொன்றில் தங்கியிருக்கிறார்.
அந்த விடுதிக்கே சென்று அவருக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வு குறித்து எழுத்தாளர் பாரதிபாலன் விளக்குகிறார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு
இன்று(14/12/14)மாலை 5 மணிக்கு அவர் தங்கியுள்ள விடுதியில் அவருக்கு கா,ந,சு விருதுவழங்கப்பட்டது, பைபாஸ் அறுவைச்சிகிச்சை செய்து ஒய்வில் இருக்கும் அவருக்கு திட்டமிட்டபடி இந்த விருது வழங்கப்பட்டது , நண்பர்கள் முன்னிலையில் இந்த விருதினைப்பெற்றுக் கொண்டு, மிகவும் மகிழ்வோடு உரையாடினார், அதே நேரம் அவர் எழுதிய மகாபாரதம் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வில் திரு,பாரதிபாலன், திரு,திருமாவேலன் திரு,தமிழ்மணவாளன் திரு,. நற்றிணை யுவன் ஆகிறோர்கள் பங்கேற்றனர்,
பிரபஞ்சன் அவர்களுடன் எனக்கு 1988 இருந்தே நட்பு, குமுதம் இதழில் அவர் துணை ஆசிரியராக சிறிதுகாலம் பணியில் இருந்தார், அவர்அதிலிருந்து விலகியதும் அந்த இடத்திற்கு அப்போதைய ஆசிரியர் திரு, எஸ், ஏ,பி அவர்கள் அந்த இடத்தில் என்னை நியமித்தார், என்னாலும் சிறிது காலம் அங்கு தங்கமுடிந்தது, ஆனால் பிரபஞ்சன் அவர்களுடன் நட்புத் தெடர்ந்தது , நானும் அவரும் மேன்சன் தேடி சென்னையில் அலைந்துது தனி அனுபவம்,
பிரபஞ்சன் அவர்கள் தமிழின் சிறந்த படைப்பாளுமையாகத் திகழ்ந்து வருகிறார். தமிழ் மொழிக்கப்பால் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், /பிரஞ்சு மொழிகளிலும் பிரபஞ்சனின் ஆக்கங்கள் புகழ்பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்துவரும் பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி, பாரதிய பாஷா, கஸ்தூரிரங்கம்மாள் அறக்கட்டளை இலக்கியச் சிந்தனை, ‘சி.பா.ஆதித்தனார் விருது’ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகள் வழங்கிச் சிறப்புச் சேர்த்துள்ளன. கல்விப்புல நிலையிலும் பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களால் பிரபஞ்சனின் படைப்புகள் பாடத்திட்டத்திலும், ஆய்வுக் களங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
‘வானம்பாடி’ இலக்கியத்தினராக அறியப்பட்ட பிரபஞ்சன், மரபார்ந்த இலக்கியப் பயிற்சி, ஆழ்ந்த அனுபவம், சமூகநோக்கு, கூர்மையான பார்வை, தொலைநோக்குச் சிந்தனை, வளமான மொழியின் ஊடாக எளிய மனிதர்களை, அவர்களின் வாழ்பனுபவங்களை கலையழகோடு படைப்பாக்கம் செய்து வருகிறார்.
பிரபஞ்சன் படைப்புகளில் வளமான மொழி, பண்பாட்டுஅடையாளம், வாழ்பனுபவங்களின்வீச்சு, உச்சமாக, அறத்தின் குரலும், அன்பும், பரிவும், கருணையும், மனிதநேயமும் ததும்பி நிற்பதனைக் காணலாம். இதுவே பிரபஞ்சன் படைப்பின் அடிநாதம்.
கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக இடைவெளியோ, தொய்வோ இன்றி இலக்கியத் தளத்தில் சீராக இயங்கி வரும் பிரபஞ்சன் அவர்களின் இலக்கியப் பங்களிப்பினையும், இடைவிடாத இயக்கத்தையும் படைப்பாளுமையையும் சிறப்புச் செய்து, அங்கீகரிக்கும், உயர்ந்த நோக்கிலும் அவர்தம் வாழ்நாள் சாதனையைச் சிறப்பிக்கும் வகையிலும் கா,ந,சு விருது’ வழங்கிச் சிறப்புச் சேர்த்துப் பெருமைப்படுத்துகிறது. நற்றிணைப் பதிப்பகம்


