பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? -சீமான் கேள்வி

அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று வியாசர்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்,

தீபாவளிப்பண்டிகையை அன்றைக்கே கொண்டாட அனுமதிக்கிற ஆட்சியாளர்கள், கிருஸ்துமஸ் பண்டிகையை அன்றைக்கே கொண்டாட அனுமதிக்கிற ஆட்சியாளர்கள், ஈகைத்திருநாளை அன்றைக்கே கொண்டாட அனுமதிக்கிற ஆட்சியாளர்கள், அம்பேத்கர் நினைவு நாளை திசம்பர் 06 அன்று கொண்டாட அனுமதிப்பதில்லை. காரணம், அன்றைக்கு ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு இருக்கிற மக்கள் எழுச்சியோடு ஒன்றுகூடுகிறார்கள் என்று அந்த நாளை பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள்.

இன்றைக்கு எமது உரிமை கோரி இனத்தின் விடுதலைக்காகப்போராடினால் அவனுக்குப் பெயர் தீவிரவாதி; பயங்கரவாதி. இந்த பட்டம் சுமத்தப்பட்டு ஐந்து முறை சிறை சென்றேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன? தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப்பேசுகிறார்; அப்படி என்றால், அத்தடை செய்யப்பட்ட இயக்கங்களை எதிர்த்துப் பேசலாமா? தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரித்துப் பேசக்கூடாது; எதிர்த்துப்பேசலாம் என்றால், இதுதான் சனநாயகமா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்று நச்சாகட்டும் என்றார். அப்படி என்றால், எவ்வளவு காயத்தைச் சுமந்து இந்த வார்த்தைகளை அம்பேத்கர் சொல்லியிருப்பார்? இங்கு மதம்தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது; நீதிபதியைவிட புரோகிதருக்குத்தான் இந்த தேசத்தில் அதிக மதிப்பளிக்கப்படுகிறது. ஆதலால், சமூகப்புரட்சியை முன்னெடுக்காது அரசியல் புரட்சியை நடத்த முடியாது. அதை உணர்ந்துதான் வாழ்வியல் நெறிக்கு வள்ளுவன்,சமூக நெறிக்கு அண்ணல் அம்பேத்கர்,சனநாயக நெறிக்கு அண்ணா, இனத்தின் விடுதலைக்குறியீடாக தலைவர் பிரபாகரனையும் ஏற்றிருக்கிறோம். இந்துக்களுக்கு புனிதநூலாக பகவத் கீதை, இசுலாமியர்களுக்கு புனித நூலாக குரான், கிருத்தவர்களுக்கு பைபிள், உலகத்தவர் அனைவருக்குமான புனித நூலாக திருக்குறளும் இருக்கிறது.

இங்கு தாழ்த்தப்பட்டவன்தான் இருக்கிறானே ஒழிய, தாழ்ந்தவன் என்று எவனும் இல்லை. நான் தாழ்த்தப்பட்டவன் என்றால், என்னை எவன் தாழ்த்தினானோ அவனே குற்றவாளி; பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது அம்பேத்கர் கோணிப்பையுடன்தான் செல்ல வேண்டியிருந்தது. அப்படி கோணிப்பையுடன் பள்ளிக்குச் சென்றவர்தான் பின்பு, கோட் சூட்டுடன் பாராளுமன்றத்திற்குச் சென்றார். வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது என்றார் அம்பேத்கர்.

அறிவைத்தேடி ஓடு; நாளை உன் நிழலைத்தேடி வரலாறு வரும் என்றார் அம்பேத்கர்; அதனால்தான், நூலகத்தில் காவலன் நேரம் முடிந்துவிட்டது என விரட்டுகிற அளவுக்குப் படித்தார் அம்பேத்கர். இன்றைக்கு படிப்பதற்கு படிப்பகங்களா இருக்கிறது? குடிப்பதற்குத்தான் தெருவுக்குத் தெரு குடிப்பகங்கள் இருக்கிறது. பாஜகவின் ராஜ்நாத் சிங் குற்றம் பெருகிவிட்டது; அதனால், சிறைகளை அதிகப்படுத்துங்கள் என்கிறார். பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? இன்றைக்கு ‘கிளீன் இந்தியா’ திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இவர்களே கூடையில் குப்பையை கொண்டுவந்து கொட்டிவிட்டு இவர்களே குப்பையை அள்ளுகிறார்கள்.அதற்கு நான்கு துடைப்பங்கள் கொண்டுவந்தால், நாற்பது கேமராக்கள் கொண்டு வருகிறார்கள். இந்தியாவை சுத்தப்படுத்துவேன் என்பவர்கள், தொடர்வண்டியின் தண்டவாளங்களுக்கிடையே மனிதக்கழிவுகள் இருக்கிறதே, அதனை ஒரு நாள்கூட சுத்தம் செய்ய வேண்டாம். ஒரு மணிநேரம்கூட சுத்தம் செய்ய வேண்டாம். ஒரே ஒருமுறை சுத்தம் செய்யுங்கள் பார்ப்போம். ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் தலைவர் அல்ல அம்பேத்கர்; ஒட்டுமொத்த இந்திய மக்களின் தலைவர் அம்பேத்கர். மனுதர்மமானது சூத்திரன் ஒருவன் படித்தால் அவன் அடுத்த பிறவியில் வாயாலே மலம் கழிக்கிற மதிஸ்டாசோதிடன் என்னும் பேயாய் பிறப்பாய் என்று சபிக்கிறது. அடுத்த பிறவியிலே நாயாய் பிற; பேயாய் பிற; இந்த பிறவியிலே மனிதனாய் இரு என்று எங்களை படிக்க வைத்தவர்கள் அம்பேத்கரும், பெரியாரும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனித்தொகுதி இருக்கிறது. அதுபோல, பெண்களுக்கென்றும் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும். பெண்களும், காலம்காலமாக தாழ்த்தப்பட்டு, அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாய் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அது 136 அடிதான் இருக்கிறது. அணைக்குள் மணலைக்கொட்டி அணையின்மட்டத்தை அதிகப்படுத்துகிறார்கள். இன்னொருபுறம், உச்சநீதிமன்றமே சொன்னாலும் சரி காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்கிறது கர்நாடகா. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி நடக்கிறது. இப்படி, தமிழர்களின் நதிநீர் உரிமைகள் எல்லாம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. நம் தாய் மொழி தமிழ் வழிபாடு, வழக்காடு என்று எந்த நிலையிலும் இல்லை. தமிழில் பேசினால் படிக்காதவர்கள் என்ற மனநிலை வந்துவிட்டது.இத்தனை அடிமைத்தனம் எல்லாவற்றையும் உடைத்து, தமிழ்த்தேசிய இனத்தை மீட்டு உருவாக்கம் செய்து, மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response