யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறதாம். இந்தச் செயலில் சிங்களர்களே ஈடுபடுகிறார்கள், என்கிற உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் உலவுகின்றனவாம்.
இந்நிலையில், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைத் திணைக்கள அதிகாரிகளுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் அவரது அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதுபற்றி மேலும் குறிப்பிடுகையில்,
பசுக்களைக் களவு கொடுத்ததாகப் பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்ததுபோன்ற உணர்வுடன் எங்களிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளார்கள். இதனால், கால்நடைகள் களவுபோவதையும் கடத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கிலேயே பசுமாடுகளை வாழ்வாதாரமாக வழங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கலந்துரையாடினோம்.
போர்க்காலத்திலும், போருக்குப் பின்னரான கடந்த ஐந்து வருடங்களிலும் மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்துவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆற்றிய பணி மகத்தானது. அதேசமயம், அரசசார்பற்ற நிறுவனங்களால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இதுவரையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டபோதும் எதிர்பார்த்த அளவுக்கு பால் உற்பத்தி அதிகரிப்போ அல்லது கால்நடை அபிவிருத்தியோ ஏற்படவில்லை. இதற்குப் பெரும்பாலும் வடக்கிலேயே பசுக்களை வாங்கி வடக்குக்குள்ளேயே விநியோகிப்பதும் ஒரு காரணம். இங்கு மாடுகள் கைமாற்றப்பட்டு இடம்மாற்றப்படுகின்றனவே தவிர அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. மாடுகளுக்கிடையில் அக இனக்கலப்பு நிகழ்வதால் பசுக்களின் தரம் குன்றிப் பால் உற்பத்தியும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இதனால் வடக்குக்குள்ளேயே மாடுகளை வாங்கி வடக்குக்குள்ளேயே விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறும், வேறு மாகாணத்தில் இருந்து பசுக்களைக் கொண்டுவர முடியுமாக இருந்தால் மாத்திரமே வாழ்வாதாரமாகப் பசுக்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறும் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் கோரியுள்ளோம்.
இப்போது பசுமாடுகளை வழங்குவதைவிட, உள்ளூரில் அக இனக்கலப்பில் தரம் குறைந்து செல்லும் பசுமாடுகளைத் தரம் உயர்த்தும் திட்டமே அவசியம். இதற்கு நல்லினக் காளைகளை வடபகுதிக்கு எடுத்துவரவேண்டும்.
சில நிறுவனங்கள் தரகர்கள் மூலமாகவே மாடுகளைக் கொள்வனவு செய்கின்றன. வடக்கில் போதிய எண்ணிக்கையில் நல்லின மாடுகள் இல்லாமையால், பசுமாடுகள் களவாடப்பட்டுக் கடத்தப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காகக் கால்நடை விற்பனையில் ஈடுபடும் முகவர்களை எமது அமைச்சில் உடனடியாகப் பதிவு செய்யுமாறு கோரவுள்ளோம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே, அதுவும் கால்நடைத் திணைக்களத்தால் காதுகளில் அடையாளம் இடப்பட்ட மாடுகளை மாத்திரமே அரசசார்பற்ற நிறுவனங்கள் வாங்கி விநியோகிக்கவேண்டும் எனவும் இது பற்றிய தரவுகள் உடனுக்குடன் அமைச்சில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் இக்கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கேனும் மாடுகள் களவாடப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.