ரெமோ என்றால் சிவகார்த்திகேயன் தான் – இருமுகன் விழாவில் விக்ரம் பேச்சு

அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில்  விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன்  நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுகன்’ படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில்  நடைபெற்றது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி, இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவில் விக்ரம்  பேசும்போது, சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது, என்னைப் பார்த்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். அவர் ‘ரெமோ’ படத்தில் போட்டிருக்கும் நர்ஸ்  வேடத்தைக் கூட   நான் ஏற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்த்ததில் ஏற்பட்ட  உந்துதல்   காரணமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

‘இருமுகன்’ படத்தில் நான் ஒரு காட்சியில் நர்சாக நடித்திருக்கிறேன். இது ஒரு ஊறுகாய் மாதிரிதான். ஆனால், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் பிரியாணியே செய்திருப்பார் என்று நம்புகிறேன். இந்த விழாவில் அவர் மேடையேறும்போது, எல்லோரும் ரெமோ என்று அழைத்தார்கள். நான் இருக்கும்போது அவரை ‘ரெமோ’ என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘ரெமோ’ என்ற தலைப்புக்கு  அவர்தான்  பொருத்தமானவர் என்று பேசினார்.

ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் ரெமோ என்கிற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். அப்போது ரெமோ என்றால் அவரைத்தான் குறிக்கும். இப்போது ரெமோ என்றால் சிவகார்த்திகேயன் என்றாகிவிட்டது.

அவர் நடிப்பில் பெரிய அளவில் தயாராகிக்கொண்டிருக்கும் ரெமோ படம் தமிழ்த்திரையுலகின் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response