தேசியத்தலைவர் பிறந்தநாளன்று மரங்கள் நட்ட தமிழ் அமைச்சர்.

நவம்பர் மாதம் வந்தாலே சிங்கள இராணுவத்துக்குக் கிலி பிடித்தாட்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லும் இக்காலத்திலும் அந்தப்பயம் தொடர்கிறது.

தமிழீழப்பகுதிகளில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று சிங்கள இராணுவம் தடை விதித்திருக்கிறது.

இந்நிலையிலும் சூழலியல் காவலரான தேசியத்தலைவரின் பிறந்தநாளில் மரங்களை நட்டு மாணவர்கள் மத்தியில் உரைநிகழ்த்தியிருக்கிறார் வடமாகாண விவசாய அமைச்சர்.

எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கடும்பாறையிடுக்கிலும் வளருகிற செடி போல முளைத்துவிடுவார்கள் ஈழத்தமிழர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

அந்நிகழ்வு பற்றிய செய்திக்குறிப்பு….

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்…….!!!
கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதையும், மரக்கன்றுகளை நடுகை செய்வதையும் படங்களில் காணலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் வாரத்தில் எந்த ஒரு விழாவையும் நடத்தக்கூடாது என்று படையினர் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டபோதும், இக்காலப்பகுதியில் வடக்கின் பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களும் பொதுமக்களும் மரநடுகையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Response