
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் தொகுதியில் செல்வ.நன்மாறன், குளித்தலை தொகுதியில் சீனி.பிரகாசு, அரவக்குறிச்சி தொகுதியில் அரவிந்த்குருசாமி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தவமணி பத்மநாபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இதில் குளித்தலை, புலியூர், வேலாயுதம்பாளையம் மற்றும் கரூர் வெங்கமேடு ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பேசினார். அவர் கரூர் வெங்கமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லை. தமிழனை போல் உலகில் பெருமையாக வாழ்ந்த நாடு எங்கும் இல்லை. உலகில் யாரையும் அடிமையாக்கி தமிழன் வாழ்ந்தது இல்லை. ஆனால் நம்மை அடிமையாக்கி உள்ளனர். அறத்தின் வழி நின்று ஆட்சி செய்தவன் தமிழன். திருவள்ளுவர் போன்று அறிவில் சிறந்தவர் உலகில் யாரும் இல்லை. நம் தாய் மொழி தமிழ் இல்லை என்றால் உலகில் எவருக்கும் மொழி இல்லை. நாம் யார் என்று தெரிந்து கொண்டு தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டும். நம் உரிமையை பெறத்தான் அரசியல். அ.தி.மு.க., தி.மு.க. 50 ஆண்டு காலம் ஆட்சியில் செய்த சாதனை என்ன? சாதித்தது என்ன?. இலவச அரிசி வழங்கியது தான் சாதனை. உலகிற்கே சோறு போட்ட தமிழனுக்கு இலவச அரிசி வழங்கி கையேந்த விட்டு விட்டார்கள்.
கல்வி வியாபாரம் ஆகி இருக்கிறது. தண்ணீர் விற்பனைக்கு அல்ல. எல்லா வளத்தையும் விற்று விட்டார்கள். சோறு, நீர் இல்லை என்றால் புரட்சி ஏற்படும். இந்த ஆபத்தான நிலையில் உள்ளோம். நம் மண்ணை அந்நியன் அள்ளி சென்று விடக்கூடாது என்று நம் முன்னோர்கள் பாடுபட்டனர். ஆனால் தற்போது இருக்கிற ஆற்றை கொன்று விட்டார்கள். மணல் அள்ளாதே என்று போராடுபவன் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. எனவே தற்போது இருப்பதை காப்பாற்ற வேண்டும். தமிழன் நாதியற்று போய் விட்டான். நமக்கு பின்னால் வரும் நம் தமிழன் மானத்தோடு வாழ வேண்டும். உறுதியாக அதிகாரம் பெறுவோம். நாம் தமிழர் கட்சி அரசு அமையும். அன்று மாற்றிக்காட்டுவோம். அப்போது வேலை இல்லை என்ற பேச்சுக்கும், பசி என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது.நீங்கள் உங்கள் வாக்கை தாருங்கள். மிக சிறந்த வாழ்க்கையை நாங்கள் தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


