
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு, இன்று மதியம் 1.55 மணியளவில் காலமானார்.அவருக்கு வயது 101.
மறைந்த நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நாளை மாலை மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுகிறது.
அவருக்கான கவிதாஞ்சலி…
நூற்றுக்கு நூறு
———————————-
கெட்டித் தட்டிய
சாதியத்தை
எட்டு வைக்கும்
நேரத்திலேயே
எட்டி உதைத்த
பெருவியப்பு
அகிம்சையோ
இம்சையோ
மக்கள் நலனே
இயக்கு விசை
கலி முத்தி
தரம் பிறழ்ந்த காலத்திலும்
தடம் புரளாப்
பேராண்மை
எல்லா அகராதிகளிலும்
எளிமைக்கு எடுத்துக்காட்டு
முதல்தகவல் அறிக்கைகள்
வலிமைக்கு
முரசு கொட்டும்.
பணத்துக்கு மதிப்பில்லா இடம்
உலகில் உண்டா?
இருந்தது.
இவர் மனம்
அள்ள அள்ளக் குறையாத
நற்பண்பு
ஏழேழு தலைமுறைக்கும்
ஏற்புண்டு
தமிழரின் பெருமைக்கு
வாழ்ந்த சான்றுகளின்
வரிசையில்
இவர்
படுகுழிகள் தடுக்காத
படையாளர்
அடைமொழிகள் அண்டாத
அடையாளர்
முறுக்கிய மீசையிலா
ஆண்
தீ கருக்கிய போதும்
கவரிமான்
அறவியல் அருங்காட்சியகம்
கருத்தியல் நிறை காப்பியம்
அரசியல் பிழைப்போர்
அடியோடழிவர்
இவர்
அடியொற்றி நடப்போர்
வரலாற்றில் வாழ்வர்
நடைநடுங்கும் வயதிலும்
கொள்கை நடுங்கா
நல்ல கண்ணு
இவர்
சின்ன வயதிலேயே
சிவந்த கண்ணு
ஐந்தில் விளைந்தது
நூறிலும்
பற்றிப் படர்ந்தது.
ஒட்டுமொத்த வாழ்வையும்
மக்களுக்காகத் தந்து
இறுதியில்
உடலையும்
கொடையாகத் தந்து
விடைபெற்ற
செம்புலி
நிலைத்த தொன்மைக்கு
நெடுவணக்கம்!
– அ.தமிழன்பன்


