
கிருஷ்ணகிரி மாவட்டம்,தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அவர்களை வரவேற்ற அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சமஉ பேசியதாவது…..
தனது இரசிகர்களை வைத்து புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர், தன்னுடைய கட்சியை தூய்மையான சக்தி என்கிறார். நீ எப்படி தூய்மையான சக்தி ஆக முடியும்? நீ இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. உன்னுடைய நடவடிக்கைகள் என்னவென்று தெரியாது. உன்னுடைய இரசிகர்களுடன் கட்சி ஆரம்பித்தாய். இப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து, உன்னுடைய கட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அது தூய்மையான கட்சி அல்ல. கலப்படக் கட்சி.
உன்னுடைய கட்சிக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து சந்தர்ப்பவாதிகள் தான் வந்திருக்கிறார்கள்.‘எங்கே இடம் கிடைக்கும்?, எங்கே வசதி வாய்ப்பு கிடைக்கும்?, தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து தவெகவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னுடைய கட்சியைக் கலப்படக் கட்சி என்கிறேன்.
உன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் யார்? ஆதவ் அர்ஜூனா இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குச் சென்றார். அங்கு சண்டையை மூட்டியதால் வெளியே வந்தார். அதன்பிறகு பல கட்சிகளுக்குப் போகப் பார்த்தார்.அதிமுகவுக்கும் அவர் வரப் பார்த்தார். பின்னர்,உன்னுடைய கட்சிக்கு வந்துவிட்டார்.இன்னொருவர் பாஜவில் இருந்து வந்தவர். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வந்தவர். நாளை உன்னையும் காலி செய்துவிட்டு வேறுபக்கம் சென்று விடுவார்கள். அதனால் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
நம்ம கட்சியில் இருந்து ஒரு ஆள் சென்றிருக்கிறார், அவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை யாருக்குத் தெரியும்? அவர் அமைச்சராக யார் காரணம்?. 50 ஆண்டுகள் இந்தக் கட்சியில் பல்வேறு வசதி வாய்ப்புகளையும், பதவி சுகத்தையும் அனுபவித்து, பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்திற்குச் செல்ல யார் காரணம்?. பல கல்லூரிகளையும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் சம்பாதிக்க இந்தக் கட்சிதான் காரணம். அப்படி இருக்கும்போது, இந்தக் கட்சிக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தார். பொதுஇடத்தில் கட்சித் தலைமைக்குக் கெடு விதித்தால் யார் ஏற்பார்கள்?, கட்சித் தலைமைக்குக் கெடு விதித்தால், அந்தக் கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமா? கட்சி தானாக உடைந்து விடாதா? கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியதால், வேறு வழியின்றி கட்சியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இப்போது, அங்கு சென்று புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து புரட்சித் தளபதி விஜய் என்று சொல்கிறாய். வெட்கமாக இல்லையா?.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.


