எலான் மஸ்க் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தை இவர் வாங்கியதே அடுத்து அமெரிக்க அதிபர் ஆகும் ஆசையில்தான் என்று சொல்லப்பட்டது.

ட்ரம்பின் வெற்றி உரையின்போது,எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும், எலான் மஸ்க்குக்கு ஒரு பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, உக்ரைன் அதிபர், சுந்தர் பிச்சை போன்றவர்களுடன் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போதெல்லாம் எலான் மஸ்க்கும் இணைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா அடுத்த பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பிடம், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக வரவாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப் அளித்த பதிலில்,’ எலான் மஸ்க் என்னுடன் நெருக்கமாக இருப்பதால், இந்த கேள்வி எழுகிறது. அவர் அமெரிக்க அதிபராக ஆவதற்கு சாத்தியமில்லை. ஏனெனில் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. அவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் . அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடக் கூடியவர் அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும் என்றார்.

இதன்மூலம் பல மாதங்களாக அடுத்து அமெரிக்க அதிபர் வேட்பாளராக எலான் மஸ்க் போட்டியிடுவார் என்கிற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Leave a Response