நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ?

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறு வரையறை முடிந்த பிறகு, 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு, மற்ற 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்திலும், மற்ற 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்2026 ஆம் ஆண்டிலும் முடிகிறது.

2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலும் வருவதால், முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை முன்னதாகவே முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது….

ஊரக உள்ளாட்சிகளின் சாதாரண தேர்தலுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள் உட்பட அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார்நிலையில் வைப்பது அவசியம். எனவே, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று அவற்றின் தரம், நிலையை ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் சிறிதளவு பழுதடைந்தவை, பயன்படுத்த இயலாத அளவுக்கு முழுமையாகப் பழுதடைந்தவை என தரம்பிரிக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரிசெய்ய ஒரு பெட்டிக்கு ரூ.21 வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் சம்பந்தமாக ஏற்கெனவே, ஒன்றிய தலைமை தேர்தல் அதிகாரியிடம், வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இப்போது வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வெக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றால் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response