33 ஆவது பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம்,வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத்.இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
3 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய இரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த அதிர்ச்சியோடு மேலும் ஓர் அதிர்ச்சியாக நேற்று மாலை ஐந்து மணியளவில் வினேஷ் போகத் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில்….
மல்யுத்தம் என்னைப் போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய துணிச்சல் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட் பை என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கப்பதக்கத்தோடு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் மல்யுத்தப் போட்டியிலிருந்தே விலகுவதாக அறிவித்தது நாட்டையே ஆட வைத்துவிட்டது.
இரண்டு நாட்களாக நிஜத்தில் நடந்தவை சினிமா போல் உள்ளது என்று விளையாட்டு இரசிகர்கள் வேதனையுடன் சொல்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியா அசத்தியது. தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.
உடனே இந்தியாவெங்கும் அவருக்கு பலத்த ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.
அரையிறுதியில் அவர் கியூபா வீராங்கனையை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.அதன்பின், அவர் பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரணுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் புயல்வேகத்தில் பரவின.
முத்தாய்ப்பாக, வினேஷ் போகத் செய்த இந்த சாதனை பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் முகத்தில் அறைந்ததாக அவரது மாமாவும் குருவுமான மஹாவீர் சிங் போகட் கூறினார்.
மஹாவீர் சிங் போகட் கூறுகையில், “வினேஷ் போகத், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் முகத்தில் அறைந்துள்ளார். எங்கள் மகள் செய்ததை பிரிஜ் பூஷன் சிங்கால் செய்யவே முடியாது. அவர் வினேஷுக்கு நிறைய தீங்கு விளைவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் வினேஷுடன் உள்ளனர். என் கனவை என் மகள் நிறைவேற்றிவிட்டாள். கடவுள் வினேஷை மேலும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாஜக விழித்துக் கொண்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுமே நம்மை இவ்வளவு தாக்குகிறார்களே, அவர் தங்கம் வென்று சாதனை படைத்து விட்டால்,அதன்பின் நம்மைப் பற்றி எதிர்மறையாக ஏதாவது பேசிவிட்டால் என்னவாகும்? பெரிய அவமானமாகிவிடும் என்று அக்கட்சி நினைத்திருக்கிறது.
அதன்பின்னர்தான் சினிமா போல் அடுத்தடுத்த திருப்பங்கள் திடுமென நடந்து முடிந்துவிட்டன.
வினேஷ் போகத் எடை அதிகம் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.யாரிடமும் பேச முடியாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அடுத்து யாரும் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இவையெல்லாம் ஒலிம்பிக் விதிகளின்படி நடந்தவை. நடந்த இந்த நிகழ்வுகளுக்கும் ஆளும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று சொன்னால் குழந்தைகூட நம்பத் தயாராக இல்லை.வினேஷ் போகத் தங்கம் வென்றால் நாட்டுக்குப் பெருமை ஆனால் அக்கட்சிக்குச் சிறுமை.எனவேதான் இப்படியான நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன என்கிற விமர்சனங்கள் ஊடகங்களில் நிறைந்து காணப்படுகின்றன.
ஒட்டுமொத்த நாட்டுக்கும் உலக அரங்கில் கிடைக்க வேண்டிய பெருமையை நாட்டின் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்துக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு செயலை தங்கள் கேவலமான சுயநலத்துக்காக ஆளும்கட்சியே விட்டுக்கொடுத்துவிட்டது என்றும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இவற்றிற்கெல்லாம் பாஜகவும் பிரதமரும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.