சாகித்ய அகாதமி நிகழ்ச்சியில் கவிஞருக்கு நேர்ந்த கொடுமை


மரியாதைக்குரிய சாகித்திய அகாதமி பொறுப்பாளர்களுக்கு வணக்கம்,
16.11.2014 தேதி, தேசீய புத்தக வாரம் சாகித்ய அகாதமி புத்தகக் கண்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் “எனது கவிதைகளும் நானும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டேன். சாகித்ய அகாதமியின் மேல் நான் வைத்திருக்கும் பெருமதிப்பின் காரணமாக அந்த அழைப்பை ஏற்று நானும் சென்றிருந்தேன். அறிமுக உரையின்போது, மரியாதைக்குரிய ஐசக் சாமுவேல் அவர்கள் கண்ணதாசன், மு. மேத்தா, வைரமுத்து போன்றவர்களின் வழித்தோன்றலில் வந்த மாந்திரீகக் கவிஞன் என்.டி. ராஜ்குமார் இப்போது உங்கள் முன்னால் உரை நிகழ்த்துவார் என்று சொல்லி அமர்ந்தார்.
நான் பேசும்போது மரியாதைக்குரிய ஐசக் சாமுவேல் அவர்கள் கண்ணதாசன் வைரமுத்து, மு. மேத்தா வழித்தோன்றலில் வந்தவர் என்று என்னைக் குறிப்பிட்டார். அவரிடமும் தங்களிடமும் மிக அன்புடன் சொல்லிக்கொள்கிறேன். நான் கண்ணதாசன் வைரமுத்து, மேத்தா வழித்தோன்றலில் வந்தவன் அல்ல. நான் முற்றிலும் வேறொரு படைப்புத் தளத்தில் இயங்கக்கூடியவன். அவர்களின் படைப்புகள்மீது எனக்கு எந்த அபிப்பிராயங்களும் இல்லை. சரி, நான் என்னுடைய தலைப்புக்கு வருகிறேன் என்றேன். உடனே பார்வையாளர்களாக வந்திருந்த ஐந்து பேர் எழுந்து என்னைப் பேசவிடாமல் மனம் நோகும்படியாக திட்டி அவமானப் படுத்தினார்கள். அந்த ஐந்து பேர்களில் ஒருவரான காமராஜர் நற்பணிமன்ற தலைவரும், சிவாஜி நற்பணிமன்றத் தலைவருமான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுந்து கையை முஷ்டிச் சுருட்டி, விரலைத் தூண்டிக்காட்டி, கண்ணதாசனை விமர்சித்து விட்டு இந்த அரங்கத்தைவிட்டு உன்னால் வெளியே சென்றுவிட முடியுமா என்று மிரட்டினார். ராதாகிருஷ்ணனுடன் வந்திருந்த மற்றவர்களும் எழுந்து என்னை பேசவிடாமல் எச்சரிக்கை செய்தபடி குழப்பம் விளைவித்தனர்.
நான் கண்ணதாசனை விமர்சிக்கவோ, அவரைப் பற்றி பேசவோ இல்லை. நான் அவர் வழித்தோன்றல் அல்ல என்று மட்டும்தான் சொன்னேன். கொடுக்கப்பட்ட தலைப்பில் என்னைப் பேச அனுமதியுங்கள் என்று மிகத் தாழ்ந்த குரலிலும் அன்பாகவும் கேட்டுக் கொண்டேன். இருந்தும் அவர்கள் என்னை எச்சரிக்கைச் செய்தபடி பேசவிடாமல் குழப்பம் செய்தனர். நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடம் நான் பேசுவதற்கான சூழலை உருவாக்கித் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், குழப்பம் விளைவித்தவர்களை விட்டு விட்டு மேடையேறி வந்து, என்னைப் பிடித்து உட்காரவைத்தார்கள்.
பார்வையாளராக வந்திருந்த, சிறுகதை ஆசிரியர் ஹசன், நிகழ்ச்சிப் பொறுப்பாளர் முகிலை ராசபாண்டியன் அவர்களிடம் கவிஞர் என்.டி. ராஜ்குமாரை பேச விடுங்கள் ஒருபடைப்பாளியை அழைத்து வைத்து இப்படி அவமானப்படுத்துவது தவறென்று சொன்னார். இருந்தும் முகிலைராசபாண்டியன், குழப்பம் விளைவிப்பவர்களை விட்டு விட்டு என்னை உட்காரச்சொன்னார். நான் கொடுக்கப்பட்டத் தலைப்பில் பேசிவிட்டுத்தான் செல்வேன் என்றதும் ராதாகிருஷ்ணனும் அவருடன் வந்திருந்தவர்களும் என்னை மிரட்டினார்கள்.
ஒரு ரசிகர் மன்றத் தலைவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இலக்கியப் படைப்பாளிக்குக் கொடுக்க மறுத்ததுடன் என்னை இழிவுபடுத்தும் அளவுக்கு சாகித்திய அகாதமி நடந்துகொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு கலவரமும் நடந்துகொண்டிருக்கவே மேடையில் என்னோடு இருந்த சகபடைப்பாளி களான லட்சுமி மணிவண்ணனும், நடசிவகுமாரும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
அடுத்துப் பேசவந்த மணிவண்ணன் குழப்பம் விளைவித்தவர்களை முன்வைத்து, அவர்கள் எனக்கு பால்யகால நண்பர்கள், எனக்கு மாணவப்பருவத்திலேயே பழக்கமுடையவர்கள் என்று சொந்தம் கொண்டாடி விட்டு எடுத்த எடுப்பிலேயே என்.டி. ராஜ்குமார் ”எவ்வளவுதான் குறைபாடுகள் உள்ளவராக இருந்தாலும்…” என்று பேச்சைத் துவங்கினார். மேடையிலிருந்து வெளியேறிய நான், மணிவண்ணனிடம் என்னிடம் நீ என்ன குறைபாடுகளைக் கண்டு பிடித்தாய் சொல் என்று கேட்டேன், அதற்குச் சிறிதும் செவி சாய்க்காமல் நான் என்னுடைய கவிதைகளை வாசிக்கிறேனென்று தாவிச் சென்று விட்டார். எனக்குத் தாங்க முடியாத அவமானமும், கோபமும் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் நான் அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டேன். ஏற்கனவே இஸ்லாமிய படைப்பாளி களையும், தலித் படைப்பாளிகளையும், பெண்ணிய படைப்பாளிகளையும் கீழ்த் தரமாக பேசிவருகிறார் மணிவண்ணன். சமீபத்தில், தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் “சாதி இன்று” என்னும் நூல் குறித்த கருத்தரங்கை நடத்தியது. அதில் , தலித்துகளுக்கு எதிரான இடைநிலை சாதி அரசியலை முன்வைத்துச்செல்லும் போக்குகள் குறித்து நான் கருத்து சொன்னபோது கூட்ட அரங்கில் வைத்து ஒலிபெருக்கியில் நான் நாடார்தான்; என்வீட்டில் வந்து சாப்பிட்டுவிட்டு என்னையே விமர்சனம் செய்கிறாயா என்ற பதிலை முன்வைத்தார் மணிவண்ணன். வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில், ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் கொடுத்தப் பரிசை பெற்றுக்கொண்ட நட. சிவகுமாரை என்ன சொல்வதென்றே புரியவில்லை. நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயர் இல்லை. மறுநாள் தினத்தந்தி செய்தியில், ராதாகிருஷ்ணன் நன்றியுரை சொன்னதாக வெளிவந்தது. இந்த மோசமான நிகழ்வைப் பற்றி பாதிக்கப்பட்ட என்னிடம் எதையும் கேட்காமல் 18.11.2014 – ல் வெளிவந்த தமிழ் இந்து பத்திரிக்கை லட்சுமி மணிவண்ணன் திரித்துச்சொன்ன செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட என்னுடைய தரப்பு குறித்து செய்தியாளர் முறைப்படி விசாரிக்கவில்லை.
சாதிய மத உணர்வுகளைக் கடந்த சக படைப்பாளிகளே, உங்களுக்கு இதுபோன்ற ஒரு கொடுமை நேர்ந்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்குமென்பதை அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன்.
– என்.டி. ராஜ்குமார்

Leave a Response