நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தருகிறார்கள் – தங்கம் தென்னரசு சரவெடி

நிதிப்பகிர்வு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது…..,

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி நிர்வாகச் சீர்கேடுகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ 4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ 1000 பெறுகின்றனர்.தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டில் இருந்து ₹6.23 இலட்சம் கோடி நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்தத் தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.

மாநிலங்களுக்கு வர வேண்டிய நிதியை செஸ் மற்றும் சர் சார்ஜ் மூலமாக ஒன்றிய அரசே அபகரித்துக்கொள்கிறது. 2011-12- இல் அரசின் மொத்த வருவாயில் செஸ், சர் சார்ஜின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது. 2021-22- அரசுக்கு செஸ், சர் சார்ஜ் மூலமாக கிடைக்கும் வருவாய் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செஸ், சர் சார்ஜ் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கத் தேவையில்லை என்பதால் மொத்தத் தொகையும் ஒன்றிய அரசுக்குச் சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. நிதி ஆளுமையை மாநில அரசுகள் இழந்துள்ளன.

ஒன்றிய அரசு மக்கள் தொகை அடிப்படையிலும் தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை வழங்கவில்லை. இந்தியாவில் 6.124 சதவீத மக்களைக் கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு மொத்த நிதியில் 4.079 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. நம்மிடம் இருந்து ஒன்றிய அரசுக்குச் செல்லும் ஒரு ரூபாய்க்கு நமக்கு அங்கிருந்து கிடைப்பது 29 பைசாதான். மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது.

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. 2014 இல் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ₹2.23 இலட்சம் கோடி ஒன்றிய அரசுக்குக் கொடுத்தால் ₹15.35 இலட்சம் கோடி திரும்பக் கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ 2 ஆவது கட்டத் திட்டம் ₹63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50% நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ 72,000 கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ 1.68 இலட்சம் கொடுக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டுகளாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காகக் கோரப்பட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ 2027 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டப் பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. ஒன்றிய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாகப் பணிகளை முடிக்கமுடியும். தமிழ்நாடு அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழ்நாடு அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response