ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொதுப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்மையில், சம வேலை சம ஊதியம், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு, பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு டெட் பயிற்சி பெற்று ஆசிரியர் வேலைக்குக் காத்திருக்கும் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.