பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
வழக்கமாக மூன்று பேர் இருக்கும் அக்குழுவில், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சார்பில் ஒரு உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.வழக்கத்தை மீறிய ஆளுநரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தச் சூழ்நிலையில், செப்டம்பர் ஆறாம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. அதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒரு உறுப்பினரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
ஆளுநரின் இந்த உத்தரவு தன்னிச்சையான முடிவு. வழக்கமான மரபுகளை மீறிய செயல். இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இந்நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்கான பணிகளைத் தொடங்குவதா, வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு தேடுதல் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை சென்றுள்ளனர்.
இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் விவரங்கள் அடங்கிய அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அதில் குழுவின் ஒருங்கிணைப்பாளராக வேந்தர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் சார்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் தீனாபண்டு, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 6 ஆம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த செய்திக் குறிப்பில் இதே பெயர் கொண்ட சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு பட்டியலில், 4 ஆவது உறுப்பினராக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரத்தூர் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 13 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசிதழில், பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினர் நிராகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாட்டுக்கு மரண அடி கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.