முதல்வர் தொகுதியிலேயே தோல்வி – பாசக அதிர்ச்சி காங்கிரசு உற்சாகம்

கர்நாடகாவில் பதவிக்காலம் நிறைவுபெற்ற 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர உள்ளாட்சிகளின், 1,185 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதுபோலவே 57 கிராம பஞ்சாயத்துகளுக்கும் டிசம்பர் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது.

உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசுக் கட்சி 501 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 433 இடங்களைப் பிடித்துள்ள ஆளும் பாஜக கட்சி 2 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த முறை 195 இடங்கள் சுயேச்சை வேட்பாளர்கள் வசம் சென்றுள்ளது. ஆம் ஆத்மி, ஜனதா கட்சிக்கு தலா 1 இடம் கிடைத்துள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் முறையே 2 மற்றும் 6 இடங்கள் கிடைத்துள்ளன.

20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரசு பெரும்பான்மை பெற்று இருக்கக் கூடிய நிலையில், பாஜக 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான சிக்காவியின் பங்காபுரா பேரூராட்சியின் 23 வார்டுகளில், 14 ஐ காங்கிரசு கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது.

கர்நாடக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரசுக்கட்சி, மக்கள் பாஜக கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றத் தயாராகிவிட்டனர் என்று தெரிவித்துள்ளது.

Leave a Response