திருவள்ளுவர், பாரதிதாசன் வேடமிட்ட குழந்தைகள் தமிழன்னை சிலையுடன் ஊர்வலம்

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் 1-ம் தேதியை  நினைவுபடுத்தும் வகையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் மன்னார்குடியில் தமிழகத் திருநாள்  கொண்டாடப்பட்டது.  அதில்,தமிழைக் காக்கக்கோரி, திருவள்ளுவர், ஔவையார், கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் வேடம் அணிந்து தமிழன்னை சிலையுடன் சிறுவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

இதில் பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் மழையைப் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். தமிழைக் காக்கும் வாசகங்கள் அடங்கிய பலகைகளை அனைவரும் பிடித்துச் சென்றதுடன் தமிழை காக்க முழக்கமிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளர் டாக்டர்.பாரதி செல்வன் கூறியதாவது,

”யுனஸ்கோ இன்னும் 100 ஆண்டுகளில் அழியப்போகும் 25 மொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில் 8-வது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. ஒரு மொழி அழிவதற்கு அந்த மொழி சொந்த மக்களால் கைவிடப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்படுதல், தாய் மொழியின் மதிப்பு குறைந்ததாக நினைத்தல், ஆதிக்க மொழியால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற காரணங்களால்தான் அழிவை நோக்கி செல்கிறது எனவும் யுனஸ்கோ அறிவித்துள்ளது.

இவை எல்லாம் நம் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமாக இருப்பதுடன் அழிவை நோக்கியும் செல்கிறது தமிழ் மொழி.தமிழை அழிவில் இருந்து காக்கவே  தமிழன்னை ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், திருவள்ளுவர், ஔவையார், கம்பர், பாராதியார், பாரதிதாசன், நம்மாழ்வார் வேடம் இட்டு தமிழ் அன்னை சிலையுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் மன்னார்குடி தேரடியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பந்தலடி வரை நடைபெற்றது.

வீட்டில் குழந்தைகளைத் தமிழிலேயே பேச வைக்க வேண்டும், குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும், வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகையை தமிழில் வைக்க வேண்டும், தினமும் நாம் பேசும்போது ஆங்கிலச் சொற்களின் கலப்புகள் அதிகமாக உள்ளன. இது அப்படியே தொடர்ந்தால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் என்ற புதிய மொழி உருவாவதுடன், நாம் தமிங்கிலர் இனம் என அழைக்கப்படுவோம், நமது குழந்தைகளுக்கு தரமான தமிழ் வழிக் கல்வி கொடுக்க தமிழக அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும், நமது உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட வகை செய்ய 2006-ல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கக் கோருவோம் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குக்  கொடுத்தோம்  என்றார்.

Leave a Response