வேதாளம் திரைப்பட விமர்சனம்

 

தங்கை தமிழை (லட்சுமி மேனன்) கல்லூரியில் சேர்ப் பதற்காக கணேஷ் (அஜித்) கொல்கத்தா வருகிறார். அங்கே வாடகைமகிழுந்து நிறுவனம்  நடத்தும் லட்சுமிதாஸை (சூரி) சந்திக்கிறார். அந்த நிறுவனத்தில் அஜித்துக்கு ஓட்டுநர் வேலை கிடைக்கிறது. சிரித்த முகம், சாது வான பார்வை என்று வேலையைப் பார்த்துவரும் அஜித், கடத்தல் கூட்டத்தைப் பிடிக்கக் காவல்துறைக்கு உதவுகிறார்.

அந்தக் கூட்டம், அஜித்தைக் கொல்ல வரும்போது அஜித் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். லட்சுமி மேனன், அஸ்வின் நிச்சயதார்த்த வேலைகள் தொடங்கும் நேரத்தில் தாதா கூட்டத்தோடு அடிதடி, கொலை என்று அஜித்தின் மற்றொரு முகத்தை ஸ்ருதி ஹாசன் பார்த்துவிடு கிறார். அதன் பிறகு நிச்சயதார்த்தம் நடந்ததா? அஜித்துக்கும் அந்த சர்வதேச தாதா கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதுதான் வேதாளத்தின் கதை.

தங்கை மீது அஜித் அளவு கடந்த அன்பைக் கொட்டும்போதே அந்தப் பாசத்துக்கு பின்னணியில் ஏதோ ஒரு பயங்கரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. வெள்ளந்தியான அந்தச் சிரிப்பு பேய்ச் சிரிப்பாக மாறும் தருணமும் பல படங்களின் நினைவு களைக் கிளறவே செய்கிறது. சிவா காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஆனால் கதையைவிட அஜித்தின் நட்சத்திர மதிப்பைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

ரவுடி, அப்பாவி என இரண்டு பரிமாணங்களி லும் அஜித் கலக்குகிறார். பாசத்தை வெளிப்படுத்தும் போது பெண்களிடமும், சண்டையிடும்போது தன் ரசிகர்களிடமும் கைதட்டல்களை அள்ளுகிறார். பாடல்களிலும் தனித்துத் தெரிகிறார்.

படத்தில் லட்சுமி மேனன் நடிப்பும், கதாபாத்திரமும் கச்சிதம். ஸ்ருதி ஹாசன் வீண். ராகுல் தேவ், கபீர் என்று வட இந்திய நடிகர்களின் வில்லத்தனம் பெரிதாக ஈர்க்கவில்லை.

சூரி, அஜித்தால் தன் மாமியாரிடமும், மனைவியிடமும் சிக்கிக்கொள்ளும் இடங்கள் சிரிப்பு. மயில்சாமி, சாமிநாதன், கோவை சரளா ஆகிய நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை குறைவுதான்.

பாடல்களிலும், பின்னணி இசையிலும் அனிருத் மெனக்கெட்டிருக்கிறார். ‘ஆலுமா டோலுமா’ பாடல் இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் நாயகன் அறிமுகமாகும் பாடலைப் போல இருக்கிறது.

கொல்கத்தாவின் நெரிசலான இடங்களையும் வெற்றியின் கேமரா வண்ணமயமாகக் காட்டுகிறது.

திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையே அண்மையில் அதிகம் கேட்ட நமக்குப் பெண்கள், பெண் சுதந்திரம் ஆகியவை பற்றி மரியாதையுடன் அஜித் பேசுவது பெரிய ஆறுதல். வசனம் எழுதிய சிவாவுக்குப் பாராட்டுக்கள்.

எதையும் யோசிக்காமல் படம் பார்க்க வேண்டும். யோசித்தால் சிக்கல்தான்.

Leave a Response