அடுத்து ஷாருக்கான் கைது – மராட்டிய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதை விருந்து நடைபெற்றது என்றும் நடுக்கடலில் நடந்த சோதனையில் அது வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

அந்தச் சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்பட 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து இருந்தனர்.

இதில் ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகிய 3 பேரிடம் இருந்து 13 கிராம் கொகைன், 5 கிராம் எம்.டி., 21 கிராம் கஞ்சா, 22 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் ஒருநாள் காவல் முடிந்து நேற்று முன்தினம் 3 பேரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (என்.சி.பி.) மும்பை மெட்ரோபாலிட்டன் கூடுதல் மாஜிஸ்திரேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மாஜிஸ்திரேட்டு ஆர்.எம். நெலிகர் 3 பேரையும் வருகிற 7 ஆம் தேதி (நாளை) வரை காவலில் எடுத்து விசாரிக்க என்.சி.பி.க்கு அனுமதி வழங்கினார்.

இது தொடர்பான விசாரணையின் போது, ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை என்.சி.பி. தெரிவித்தது.

இந்தநிலையில் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது….

ஆர்யன் கானின் கைது போலியானது. கடந்த ஒரு மாதமாக இந்த தகவல் புலனாய்வு நிருபர்களிடம் பரப்பப்பட்டது. அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான் தான் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதை மறைக்கவே ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டதாக விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response