
உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும், தமிழின உணர்வாளருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று (07.11.2015) பகல், சென்னை மேற்கு தாம்பரம் முல்லை நகரில் நடைபெற்றது.
மேற்கு தாம்பரம் முல்லை நகரில் வைக்கப்பட்டிருந்த அய்யா அரணமுறுவல் உடலுக்கு, பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஐயா. வே. ஆனைமுத்து, நாம் தமிழர் கட்சி திரு. அன்புத் தென்னரசன், தமிழகத் தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத் செயற்குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேச நடுவம் வழக்கறிஞர் கோ. பாவேந்தன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், உலகத் தமிழ்க் கழக சென்னை மாவட்டத் தலைவர் புலவர் அரசெழிலன், பாவலர்கள் இன்குலாப், அறிவுமதி, பேராசிரியர்கள் வீ. அரசு, கு. அரசேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், அறிஞர் பெருமக்களும் அய்யா அரணமுறுவல் அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்து, நினைவேந்தல் உரை நல்கினர். உலகத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் திரு. அன்புவாணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேசியதாவது:
“தேவக்கோட்டையில் தமிழர் முன்னணி அமைப்பின் சார்பில் நவம்பர் 1 அன்று, நடந்த போது, தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டத்தில், ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் தோழர் அரணமுறுவல் உள்ளிட்டோர், நான் ஒன்றாகப் பங்கேற்றுப் பேசினோம்.
திடீரென, விடியற்காலை தோழர் இறையெழிலன் அவர்கள், “அரணமுறுவல் நம்மைப் பிரிந்துவிட்டார்” எனச் சொன்னபோது, பேரதிர்ச்சியாக இருந்தது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் பத்து நாள் கிடந்து அவர் இறந்திருந்தால்கூட, அதிலொரு ஆறுதலாவது இருந்திருக்கும். ஆனால், திடீரென மாரடைப்பில் இறந்தது, மிகவும் அதிர்ச்சியைத் தருகிறது.
தமிழ்வழிக் கல்விக்காகப் போராடும் “தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில்”, துடிப்புடன் அவர் செயல்பட்டார். எங்களை தொடர்ந்து, அதில் செயல்படத் தூண்டிக் கொண்டே இருந்தார். தேவக்கோட்டை பொதுக்கூட்டத்தில்கூட, அதுபற்றி பேசினார்.
1968ஆம் ஆண்டு, மொழிஞாயிறு பாவாணர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில் உலகத் தமிழ்க் கழக அமைப்பு மாநாடு, திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த போதுதான், தோழர் அரணமுறுவல் அவர்களை முதலில் சந்தித்தேன். அப்போது அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். படித்து வந்தார். அன்று முதல், கடைசிவரை அவருடன் தோழமையுடன் செயல்பட்டோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த முறுவலுக்கு நெருங்கிய தோழர் சேயோன். எனக்கும் நெருங்கிய தோழர் ஆனார். இப்போது உயிருடன் இல்லை. அவரிடம், “அரணமுறுவல்” என்ற பெயருக்கு என்ன பொருள் என்று ஒருமுறை கேட்டேன். “சிரிப்பை அரணாகக் கொண்டவர்” என்று பொருள் சொன்னார். அதிலொரு உண்மை இருந்தது. பெயரின் பொருளுக்கு ஏற்ப, கடைசி வரை புன்னகையை அரணாகக் கொண்டு வாழ்ந்தவர் அரணமுறுவல் ஆவார். அவருடன் உலகத் தமிழ்க் கழகத்தில் ஒரு சாலை மாணாக்கர் என்று சொல்லப்படுவது போல் நான் செயல்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாடு விடுதலை, பிறமொழி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்ற தனித்தமிழ் என தமது கொள்கையில் உறுதியாக நின்றவர் தோழர் அரணமுறுவல். தமிழ்நாடு விடுதலை நோக்கில், தமிழ் அமைப்புகளிடம் ஒருங்கிணைப்பை உருவாக்க அவர் செயல்பட்டு வந்தார். அவரது திடீர் மறைவு, தமிழின உணர்வாளர்களுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழினத்திற்கும் பேரிழப்பாகும்.
அவருடன் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நாங்கள் தோழமையுடன் தொடர்ந்து பேசுவோம். அவர் உரிமையுடன் கருத்துகளை எடுத்து வைப்பார். இருவேறு அமைப்புகளில் நாங்கள் செயல்பட்டு வந்தாலும், எங்கள் இருவருக்குமான இலட்சியம் தனித்தமிழ்நாடு விடுதலை, பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழ் விடுதலை என்பதாக இருந்தது.
இவ்வளவு விரைவாக அவரை இழப்போம் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த இழப்பை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்நாள் முழுக்கத் தமிழ்த் தேசியத்திற்கு – தமிழ் மொழிக்கு உழைத்த அரணமுறுவல், அதன் பயனைப் பார்க்காமலேயே போகிறார்.
இந்தியத் துணைக் கண்டத்தில், விடுதலை கோரி ஆயுதப் போராட்டம் நடக்காத மண்ணில், பெருமளவில் உயிரிழப்புகளை சந்தித்த மண், தமிழ் மண். 1938 மொழிப்போரில் இருவர் இறந்தனர். 1956இல் எல்லை மீட்புக் களத்தில், தெற்கெல்லையில் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கெல்லையில் இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். 1965 – மொழிப் போர் களத்தில், 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இவ்வளவு இழப்புகளையும் தாங்கி நிற்கும் தமிழ்மண் விடுதலை பெற வேண்டும்.
தோழர் அரணமுறுவல் பார்க்க விரும்பிய தமிழ்த் தேசிய எழுச்சியை – வெகு மக்கள் எழுச்சியை இளைஞர்களும், என்னைப் போன்ற மூத்தோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். நாம் ஏற்படுத்த வேண்டும். 1920களில் தொடங்கி, மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், அண்ணல் தங்கோ என பல்வேறு தமிழறிஞர்கள் பாடுபட்டும் தங்கள் வாழ்நாளில் பார்க்காத தமிழ்த் தேசிய எழுச்சியை, தன் காலத்தில் பார்க்கவியலாத – கடைசி வரை மனம் நொந்து எதிர்பார்த்த, தமிழ்த் தேசிய எழுச்சியை, புதிய வேகத்தோடு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதுவே, தோழர் அரணமுறுவலுக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும் எனத் தெரிவித்து, தோழர் அரணமுறுவலுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் எமது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு, தோழர் அ. ஆனந்தன், மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் செம்மொழி, சிவாஜி, வினோத் உள்ளிட்டோர், தோழர் அரணமுறுவலுக்கு நேரில் வந்து, வீரவணக்கம் செலுத்தினர்.


