மாநிலங்களவையில் திமுகவின் பலம் உயர்வு – புதுச்சேரியைக் கைப்பற்றுகிறது பாஜக

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.

கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. அதுபோல வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29 ஆம் தேதி முடிவதாக இருந்தது. 2 பேரும் விலகியதைத் தொடர்ந்து அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

இரண்டு பதவிக்கான தேர்தலும் தனித்தனியாக நடத்தப்படுகிறது. அதாவது, கே.பி.முனுசாமியின் இடத்திற்காக தனி வேட்புமனுவும், வைத்திலிங்கத்தின் இடத்திற்காக தனி வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50 விழுக்காடிற்கு ஒன்று கூடுதலான எண்ணிக்கையில், அதாவது 118 உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சி, 2 இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

118-க்கும் மேல் உறுப்பினர்களைப் பெற்றுள்ள ஒரே கட்சி தி.மு.க.தான். அதன்படி, 2 இடைத்தேர்தலிலும் தி.மு.க. தனது வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமாரை நிறுத்தியுள்ளது. தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை.

இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது.

இந்த தேர்தல் தனித்தனியாக நடைபெறுவதால், வேட்பாளர்கள் அனைவரும் யார் இடத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்? என்பதை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. வேட்பாளரான ராஜேஷ்குமார், வைத்திலிங்கத்தின் இடத்திற்கும் டாக்டர் கனிமொழி, கே.பி.முனுசாமியின் இடத்திற்கும் போட்டியிடுகின்றனர்.

அதற்கான வேட்புமனுவை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை செயலாளர் அறையில், தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு உறுதிமொழியை படித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி, திருச்சி சிவா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் இன்று. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. தி.மு.க. தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்தத்தேர்தலில் போட்டியிடவில்லை. 27 ஆம் தேதி (பிற்பகல் 3 மணி) வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாளாகும். தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள 2 வேட்புமனுக்களும் திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு எழாத நிலையில், அவை 2 மட்டுமே ஏற்கப்பட்டு ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர் கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, 27 ஆம் தேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இதன்மூலம் மாநிலங்களவையில் திமுகவின் பலம் பத்தாக உயர்கிறது.

இதேநாளில் புதுச்சேரி மாநிலங்கள்வை உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கட்சியான பாஜகவுக்கு இடையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதில் போட்டி நிலவியது.

அந்தப் போட்டியில் பாஜகவே வென்றது.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக பாஜ்கவைச் சேர்ந்த முன்னாள் நியமன சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர், புதுச்சேரி பாஜக பொருளாளராகவும் உள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். புதுச்சேரியில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினர் இடத்தில் பாஜக போட்டி இன்றி வெல்ல உள்ளது.

Leave a Response