தேர்தல் கூட்டணிக்காக தமிழீழ ஆதரவைக் கைவிட்ட வைகோ, திருமாவளவன்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், மமக சமீபத்தில் வெளியேறியது. மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன.

 சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டியக்க தலைவர்கள் கூட்டம் நடந்தது.

இதில், கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வெளியிட்டனர்.

 ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பிடித்து விடக்கூடியது தனித்தமிழீழ கோரிக்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் கட்சிதான். கடந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ம.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய தீர்மானமாக முன்வைக்கப்பட்டது ‘தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு’ என்பதுதான்.

ஆனால் இடது சாரிகள் இதில் முரண்படுகிறார்கள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித் தமிழீழம் என்பதை ஏற்காத அரசியல் கட்சியாக உள்ளது. சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை அதிகார பகிர்வு என்று மட்டுமே இடதுசாரிகள் சொல்லி வருகின்றனர்.

இந்த குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில்,  தனித்தமிழீழம் கோரிக்கை இடம்பெறவில்லை. மாறாக இலங்கை தமிழர் பிரச்னை எனக்குறிப்பிட்டு, “இலங்கை தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு மாநிலங்களில் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்றும், “தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்க வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று தன் தேர்தல் அறிக்கையில் கட்டாயம் குறிப்பிடுகிற விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் என்ற தன் முக்கிய கோரிக்கையையும் இடதுசாரி கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்துள்ளது ம.தி.மு.க.

முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கடுமையாக கண்டிக்கும் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக சற்று பின்வாங்கியுள்ளனர்.

மக்கள் நல கூட்டியக்கத்தின் இந்த குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில், கூடங்குள அணு உலை எதிர்ப்பு நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை. கூடங்குளம் என்ற வார்த்தை கூட இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

Leave a Response