உணவுக்கான உரிமைக்குப் போராடுபவர்களை ஆதரிப்போம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுக்கறி உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே இந்த திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இந்த திருவிழாவுக்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.

அதையொட்டி பிரபல வலைப்பதிவரின் கருத்து….

இன்று காலை எங்கள் ஊரில் ‘சைவ உணவு தினம்’ கொண்டாட்டம் என்ற பெயரில் சைவ உணவின் பெருமைகளை எடுத்துக் காட்டும் விதமாக ‘மினி மராத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப் பட்டு, பள்ளி,கல்லூரி மாணவர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடந்தது.

இன்று மாலை இதே ஊரில் காலம்காலமாக எளிய மக்களின் உணவாக இருந்து வரும் மாட்டுக்கறிக்கு காவி வண்ணம் பூசி அதை அரசியலாக்குவதைக் கண்டித்து ‘மாட்டுக்கறித் திருவிழா’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள். ஒன்று காலையில்! இன்னொன்று மாலையில்! ஒன்று சைவ உணவுக்கான வாதம்! இன்னொன்று அசைவ உணவுக்கான உரிமை!

காலை நிகழ்வு இனிதே நடந்தேற, மாலை நிகழ்ச்சி (நான் எதிர்பார்த்தவாறே) தடை செய்யப் பட்டுள்ளது.

காலை நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் எல்லாம் சமூக நலம் காக்கும் மகத்தான ஆர்வலர்களாக வீடு திரும்ப, மாலை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் சட்ட விரோதிகளாகக் கருதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனது எளிய மூளைக்கு இந்த பாரபட்சம் பிடிபடவில்லை.

எனக்கு இரு தரப்பும் நண்பர்கள். இருவருமே எனக்கு அழைப்பு விடுத்தனர். இரு தரப்பினரிடமும் அவர்கள் நிகழ்ச்சி குறித்து கலந்து உரையாடினேன். இரு தரப்புமே, ஒரு கட்டத்தில் கூட, இது ஒன்றுகொன்று போட்டி நிகழ்ச்சி என்று கருதவில்லை. பேசவில்லை. அவரவர் நம்பிக்கைக்காக, அவரவர்கள் போராடுகின்றனர். அவ்வளவே! அதுதான் ஜனநாயகம்.

ஒருமுறை நெசவாளர்கள் வறுமை தாளாமல் கஞ்சித் தொட்டித் திறக்க, அவர்கள் நேர் எதிரில் கிடா வெட்டி விருந்து வைத்தனர் அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக. அதற்கு காவல்துறை அனுமதி அளித்து பாதுகாப்பும் கொடுத்தது.

இன்னொருமுறை, எதிர்கட்சியான திமுக உண்ணாவிரதம் அறிவிக்க, அவர்கள் பந்தலுக்கு நேர் எதிரில் (சரித்திரத்தில் முதன்முறையாக) உண்ணும் விரதம் என்றொன்றை அதிமுக அறிவித்து, பசியுடன் இருந்தவர்கள் கண் முன்னே பிரியாணியும், சிக்கன் லெக் பீஸும் கடித்து உண்டனர். அதற்கும் காவல்துறையின் அனுமதியும்,பாதுகாப்பும் இருந்தது.

இன்று, தனது உணவுப்பழக்கத்தின் மீதான அரசியல் தலையீட்டைக் கண்டித்து நியாயமான, மிக வெளிப்படையான, அமைதியாக நடத்த இருந்த இந்தப் போராட்டத்தை தடை செய்ததும், அமைப்பாளர்களை கைது செய்ததும் கண்டிக்கத்தக்கது. அரசின் பாரபட்சமான அணுகுமுறை அருவருக்கத்தக்கது.

இந்த மாட்டுக்கறி திருவிழா மீதான எனது கருத்து சற்றே மாறுபட்டது. நாளை, அது குறித்து விரிவாக எழுதலாம் என்றிருந்தேன். இன்றைய போராட்டத் தடை, கைதுகளுக்குப் பிறகு அதை நான் எழுதப் போவதில்லை. அதிகாரத்தைக் கொண்டு ஜனநாயகத்தை நசுக்கும் இவர்களுக்கு எந்த ஒரு ஆயுதத்தையும் நான் தரப் போவதில்லை.

எனது முழு ஆதரவும் பண்பாடு, சாதி, வர்க்கம் என எத்தனையோ பெயர்களால் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இப்போது தங்களின் உணவுக்கான உரிமைக்காகவும் போராட வேண்டி களத்தில் நிற்கும் எனது சொந்தச் சகோதரர்களுக்கே.

இந்தக் கொடுமையான அடக்குமுறையால், கைதாகி இருக்கும் எனது நண்பர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதில்தான் எனக்கு உடன்பாடு.

நண்பர்களே! நீங்கள் தனியாக இல்லை.

– எஸ்கேபி. கருணா

Leave a Response