இபிஎஸ் ஓபிஎஸ் குழுவிடமிருந்து ஒரு இலட்சம் கோடியை மீட்டெடுங்கள் – டிடிவி.தினகரன் கோரிக்கை

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக் கடன் ரூ.5.70 இலட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 இலட்சம் கோடியாகவும் அதிகரித்துவிட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, சொத்து வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை, 15 ஆண்டுகளாக வாகன வரி உயர்த்தப்படவில்லை, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நட்டத்தில் இயங்குகின்றன என்றும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் டிடிவி.தின்கரன் கூறியிருப்பதாவது….

தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது.

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில்,வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல’ அமைந்துவிடும்.

அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு இலட்சம் கோடியை,அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டுப் பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response