திருக்குறள் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டுவிட்டது. 2 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் அச்சிடப்பட்டு சீனாவுக்கும், அரபு நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன. இதுமட்டும் அல்லாமல், அந்த நாடுகளில் உள்ள நூலகங்களில், இந்த நூல்களை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தற்போது பாரதிதாசன் கவிதை நூல்கள் அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இது போல திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்கவும், ஆத்திச்சூடியை அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கவும் பணிகள் தொடங்கிவிட்டன.
தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மு.ராசாராம் தலைமையிலும், சென்னையில் வாழும் கொரிய நாட்டை சேர்ந்த தமிழ் வல்லுனர் யாங், பெண் வல்லுனர் அருணா சுபா உள்பட 6 பேர்கள் கொண்ட குழு,திருக்குறளை கொரியமொழியில் மொழிபெயர்க்கும் பணியை செய்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஆங்கிலம், கொரியா மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளையும் நன்கு கற்றறிந்தவர்கள்.
ஆத்திச்சூடியை அரபு மொழியில், மொழிபெயர்க்கும் பணியை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுபோல ஆத்திச்சூடியை சீன மொழியில் மொழி பெயர்க்க டாக்டர் யூகி தலைமையில் தைவான் நாட்டை சேர்ந்த நிபுணர் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொங்கலுக்குள் மொழி பெயர்ப்புப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளுவர் தினத்துக்குள் முடிக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரிய நாட்டு தூதரகம், தமிழ்நாட்டில் வாழும் கொரியர்களுக்கு தமிழைக் கற்பது எப்படி என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளது.
