மோடி, ஜெ அரசுகளைக் கண்டித்து தீபாவளி புறக்கணிப்பு- ஆதிதமிழர்பேரவை அறிவிப்பு

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற மாபெரும் சனநாயக நாடு.
இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதே! இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி.
அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரப்பட்ட மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே! அதனுடைய விதி.
ஆனால்! அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிருத்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை மறைமுகமாக தூண்டிவிட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான்! என்பதை வெளிப்படையாகவே உறுதிசெய்கிறது.
பகவத்கீதையை தேசிய நூலாக அறிவித்தது, சமஸ்கிருதத்தை உலக மொழி அந்தஸ்த்துக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய  கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, சாதி வெறியை தூண்டி நாட்டை அமைதியிழக்க செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க.
தமிழக ‘ஜெ’ அரசோ! பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மதவெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது.
மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோதபோக்கையே கடைபிடித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே! பாதுகாப்பு கொடுக்க முடியாமல்  செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது.
இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை! மதுவெறி, மதவெறி, சாதிவெறியை தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, சாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பது” என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

Leave a Response