தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை – மோடிக்கு மம்தா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரசு தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்…

பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதத்தில் இருந்து 8 முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிலும் ஜூன் மாதம் மட்டுமே 6 முறை உயர்ந்து உள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களுக்குக் கடுமையான பாதிப்பைக் கொடுத்திருக்கிறது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் சில்லரை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100-ஐ கடந்திருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், நாட்டு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் மத்திய அரசின் கொள்கையில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் கிடைக்கவும், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அக்கறையுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Response