
சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நாட்டிலேயே முதன்மைக் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் விளங்குவதால் இதில் படிப்பதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அதேநேரம், இங்கு மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் கொடுமைகள் நடப்பதாகவும் இதில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
இந்தநிலையில், கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (38), எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்த உன்னிகிருஷ்ணன் திடீரென மாயமானார்.
ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானம் அருகே எரிந்து கரிக்கட்டையான நிலையில் உன்னிகிருஷ்ணன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சம்பவம் குறித்து ஐஐடி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் கோட்டூர்புரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி கோட்டூர்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் இறந்து கிடந்த உன்னிக்கிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து உன்னிகிருஷ்ணனுடன் விடுதியில் தங்கி இருந்தவர்கள் மற்றும் ஐஐடி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த உன்னிகிருஷ்ணன் பயன்படுத்திய மடிக்கணினி, கைபேசி ஆகியனவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உன்னிகிருஷ்ணன் தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி வளாகம் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஐஐடி வளாகத்திற்குள் செல்ல மூன்று வழிகள் மட்டுமே உள்ளன. அந்த மூன்று வழிகளிலும் ஐஐடி பாதுகாவலர்களை மீறி வெளியே ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் உள்ளே செல்ல முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் உன்னிகிருஷ்ணன் இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி இறப்பு குறித்து விசாரணை நடத்திய போது மாணவிக்கு மதரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் மாணவி இறப்பதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால் தன்னால் படிக்க இயலவில்லை. ஆகையால் தற்கொலை முடிவிற்குச் செல்கிறேன் என்று பெற்றோருக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு அதிரடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.
மாணவி இறப்பு குறித்து பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமாக சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக பேராசிரியர் விபின் நேற்று முன் தினம் தனது ஐஐடி பேராசிரியர் பதவியில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்தார். இது சென்னை ஐஐடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே சாதி மற்றும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அதனால் அவர் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் சம்பவங்கள் சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
