மாடுகளைக் காக்க மனிதர்களைக் கொல்வதா? கி.வீரமணி ஆவேசக் கேள்வி

மருத்துவ படிப்பில் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. அதற்கு மாநில அரசும் துணைபோகிறது.இரு மனங்கள் ஒன்று சேருகிற காதல் திருமணத்தில் அவர்களை பிரிக்கும் நிலையில் கவுரவகொலை நடக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மதுரையில் கிரானைட் தொடர்பாக அதிகாரி சகாயம் விசாரணை நடத்தியதில் குவாரிகளில் அடுக்கடுக்காக எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. இவை நரபலி கொடுக்கப்பட்டவையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.

அரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

பா.ஜ.க.ஆட்சியில் தலித் மக்களுக்கு எதிரான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. 2014–ம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமைகள் நடந்துள்ளன. 2ஆயிரத்து 233 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்தக்கூடாது. நுழைவுத்தேர்வு கொண்டுவரத் திட்டமிடுவதைக் கண்டிக்கிறோம். மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு வேண்டாம். நீதிபதி நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்படவேண்டும். மாடுகளைக் காப்பாற்ற மனிதர்களைக் கொல்லுவதை கண்டிக்கிறோம் என்று கி.வீரமணி ஆவேசமாகப் பேசினார்.

Leave a Response