அமைச்சர் தங்கமணியை எதிர்த்து பாசக போட்டி – அதிமுக கூட்டணி அதிருப்தி வேட்பாளர்கள் விவரம்

ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இன்று (மார்ச் 19) கடைசிநாள்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாகக் களத்தில் குதித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாருக்கு வாய்ப்பு கொடுக்காமல், பாமகவுக்கு ஒதுக்கியதால் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தனர்.இதனால் சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை எதிர்த்துப் போட்டியிட பாசக மாவட்டத் தலைவர் ஓம் சரவணா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியான தமாகா வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலனை எதிர்த்து தூத்துக்குடி மேற்கு மண்டல பாசக முன்னாள் தலைவர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் நெவளிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை எதிர்த்து முன்னாள் ஒன்றியத் தலைவர் அழகு சுப்பையா சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இவை தவிர இராமநாதபுரம், நெல்லை, சிவகங்கை மாவட்டங்களில் கடும் அதிருப்தி நிலவுவதால் கட்சிக்காரர்களே, சமூக ஆர்வலர்களைச் சுயேச்சைகளாகக் களம் இறக்கியுள்ளனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அக்கூட்டணி கட்சியினரே களத்தில் குதித்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

Leave a Response