தஞ்சையில் சசிகலா – உளவுத்துறை கண்காணிப்பால் பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்து வந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தனிமை நாட்கள் முடிந்து பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா 23 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார். வரும் வழியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வந்த சசிகலா தி.நகரில் உள்ள வீட்டில் தங்கினார்.

அமைதியாக இருந்த அவர்,திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும், மீண்டும் செயலலிதாவின் ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் எனவும் அறிக்கை வெளியிட்டார். சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில், 41 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் திடீரென சசிகலா தஞ்சை சென்றார். இரவு 10 மணி அளவில் தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள கணவர் நடராஜனின் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். நாளை (20
ஆம்தேதி) நடராஜனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் வர உள்ளதால் அன்று வரை 3 நாள் அவர் தஞ்சையில் தங்குவார் எனக் கூறப்படுகிறது.

நடராஜனின் தம்பி பழனிவேலின் பேரக் குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடராஜனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள வீரனார்கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டார். சசிகலா திருமணமான புதிதில் கணவருடன் குலதெய்வ கோயிலுக்கு வந்தவர் இப்போதுதான் மீண்டும் வந்துள்ளார். பின்னர் பாபநாசத்தில் சகோதரியின் வீட்டுக்குச் சென்று அவரது கணவர் இறப்பு குறித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

நாளை (20 ஆம்தேதி) நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே நடராஜனுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கல்லறையில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.

தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சசிகலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளதாகவும் சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதவிர,அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலரையும் சந்திக்க உள்ளதாகத் சொல்லப்படுகிறது.

சசிகலா எதற்காக வந்துள்ளார்? அவரைப் பார்க்க யாரெல்லாம் வருகிறார்கள்? என உளவுத்துறை மூலம் விசாரித்து கண்காணிக்க முதல்வர் இரகசிய உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 24 மணி நேரமும் நடராஜனின் வீட்டையும், சசிகலாவின் நடவடிக்கைகளையும் உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Response