6 வேட்பாளரும் 6 சாதி – அதிமுக இப்படி அறிவிக்கக் காரணம் என்ன?

நேற்று (மார்ச் 5) 6 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய அ.தி.மு.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் அந்தப் பட்டியல் வெளியானது.

அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகிறார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர்
சி.வி.சண்முகம் போட்டியிடுவார் என்றும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுவார் என்றும், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஆறு தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது குறித்து ம பல்வேறு செய்திகள் அரசியல் வட்டாரத்தில் உலவுகின்றன.

இவர்கள் ஆறு பேரும் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் திரும்ப அதிமுகவுக்குள் வருவதைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள் என்பதால் முதல்கட்டமாக இவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், இவர்கள் ஆறு பேரும் ஆறு முக்கிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே எல்லாச் சாதிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதற்காகவே இவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியலில் மறைமுகமாக சாதி கோலோச்சுகிறது என்று சொல்லப்படுவதுண்டு. அதிமுகவின் இந்த வேட்பாளர் அறிவிப்பின் மூலம் அதிமுக பொதுத்தன்மையிலிருந்து வில்கி சாதிகளுக்குப் பின்னால் போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவும் சொல்கிறார்கள்.

Leave a Response