பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாள் – சீமான் கொடுத்திருக்கும் 3 முக்கிய களப்பணி

பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

எனதருமை தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று “உலகத் தாய்மொழி நாள்” உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மொழிப்படைப் பிரிவான தமிழ் மீட்சிப் பாசறை, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்று வரலாற்று ஆய்வறிஞர்களால் நிறுவப்படும் நம் தாய்மொழி தமிழ்மொழியைப் போற்றிக் கொண்டாடும் வகையில் “தமிழ்த் திருவிழா”வை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் நாம் வீரவணக்கம் செலுத்தும்போதும் “மொழி காக்க; இனம் காக்க” என்று முதலில் மொழியைத்தான் காக்க வேண்டும் என்று சொல்கிறோம். மொழியைக் காத்தால்தான் இனத்தைக் காக்க முடியும். அதைப்போன்றே, “மொழியாகி எங்கள் மூச்சாகி, முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி” என்று உறுதியேற்கிறோம். நம் மூச்சினைப்போல, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்கும், மீட்கும் பணியில் நாம் ஒவ்வொருவரும் முழுமூச்சாக ஈடுபட வேண்டும்.

நம் தாய்த்தமிழ் பண்பாட்டு மொழியாக மாற, நாம் முதலில் பயன்பாட்டு மொழியாக மாற்ற வேண்டும். வழிபாட்டு மொழியாக மாற, நம் வழக்கு மொழியாக மாற்ற வேண்டும். ஆட்சி மொழியாக்க மாறவேண்டுமெனில் நம் பிறமொழிக் கலப்பற்ற பேச்சு மொழியாக்க வேண்டும். எனவே அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக நம் தாய்மொழியைப் பல்வேறு பயன்பாட்டுத் தளங்களில் மீட்கும் பணியைத் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கிறது.

அதன்படி…

1. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது பத்து வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்களின் பெயர்ப் பலகைகள் நற்றமிழில் முதன்மையாக இருக்கும்படி மாற்றம் செய்யக் களப்பணியாற்றவேண்டும்.

2. ஒரு தொகுதிக்குக் குறைந்தது ஐம்பது ஊர்திப் பதிவெண்களைத் தமிழில் மாற்ற வேண்டும். நம் கட்சி பொறுப்பாளர்கள் அனைவரும் தத்தம் ஊர்திகளில் தமிழில் பதிவெண்களை அடையாளப்படுத்த வேண்டும்.

3. தொகுதியின் முதன்மையான இடங்களில் “தமிழில் இடுவோம் கையெழுத்து! தமிழே எங்கள் உயிரெழுத்து!” முழக்கங்கள் தாங்கிய பெரிய பதாகை வைத்து அப்பகுதி மக்களிடம் தமிழில் கையொப்பமிடுவதன் தேவை மற்றும் பெருமிதங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை இக்கையெழுத்துப் பரப்புரையில் பங்கேற்க செய்து, இனி பெருமிதத்தோடு தமிழிலேயே கையொப்பமிடுவோம் என்கிற உறுதியை ஏற்றிடச் செய்வோம்.

இது தமிழ் மீட்சிப் பாசறை என்ற ஒரு பாசறையின் பணி மட்டுமன்று. நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பு. நம் தாய்மொழி தமிழ் வழக்கொழிந்து போகாது பேணிக்காத்து, மீட்கும் கடமை நம் அனைவருக்குமானது என்பதை உணர்ந்து நாம் மொழிப்பற்றோடும் இனப்பற்றோடும் பேரெழுச்சியாக இதில் பங்கேற்று களப்பணியாற்ற வேண்டும்.

ஆகவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும் இவற்றைக் கருத்திற்கொண்டு, உலகத் தாய்மொழி நாளன்று(21-02-2021) “தமிழ்த் திருவிழாவை” உலகமெங்கும் வெகுசிறப்பாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response