இராகுல்காந்தியைக் கண்டு பாசக அஞ்சுகிறது – போட்டுத்தாக்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.

இந்நிலையில் காங்கிரசுக்கும் சிவசேனாவுக்கும் சண்டை என்பது போன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

அவற்றிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரசு முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனாவின் பத்திரிக்கையான ‘சாம்னா’ ஒரு போர் வீரன் என பாராட்டியுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியான சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் கூறபட்டுள்ளதாவது…..

டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. அவ்வாறு இல்லாதிருந்தால், ராகுல் காந்தி குடும்பத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொள்ள மாட்டார்கள்.

ஒருவன் சர்வாதிகாரியாக இருந்தாலும் தனக்கு எதிராக ஒரே ஒரு மனிதன் இருந்தாலும் அவனைக் கண்டு அஞ்சுகிறான். இந்த தனி வீரன் நேர்மையானவனாக இருந்தால், அந்த பயம் மேலும் நூறு மடங்கு அதிகரிக்கிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ராகுல் காந்தி குறித்த அச்சம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரசுத் தலைவராக வருவது ஒரு நல்ல விசயம்.

நரேந்திர மோடியைத் தவிர பாஜகவுக்கு வேறு மாற்று இல்லை என்பதையும், ராகுல் காந்தியைத் தவிர காங்கிரசு க்கு வேறு மாற்று இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரச்சாரம் செய்த போதிலும், அவர் இன்னும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப்போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். இந்த எதிர்க்கட்சி, ஒரு கட்டத்தில், பீனிக்ஸ் போன்ற சாம்பலிலிருந்து கிளம்பிவரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response