மோடி மண்டியிட்டு வணங்கியது எதனால்?

தில்லி எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி நடத்திவரும் போராட்டம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது.

அவர்கள் கோரிக்கையை முற்றாக நிராகரித்துவரும் பிரதமர் மோடி, போராட்டத்தைக் கைவிடும்படி மட்டும் வேண்டுகோள் வைத்துவருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்று காலை ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்குச் சென்றார். குரு தேஜ் பகதூர் சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவாக இருந்தார். அவரது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி நேற்று காலை குருத்வாராவுக்குச் சென்ற மோடி அங்கு சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார்,

பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி குரு தேஜ் பகதூரை வழிபட்டார். பின்னர் சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதற்காக காவல்துறை பாதுகாப்பு அல்லது போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தி தில்லி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது……

வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்பிற்குச் சென்று பிரார்த்தனை செய்தேன். அங்குதான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் 400 ஆவது பிரகாஷ் பர்வின் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையே ஆகும். நமக்கு இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் கொள்கைகளைக் கொண்டாடுவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லி எல்லையில் கடுங்குளிரில் போராடிக் கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். அவர்களில் சீக்கிய மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம். அவர்கள் முன்னால் உங்களால் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்கிற மன நிலையில் நடந்துகொள்கிறார் பிரதமர் மோடி.

வெளிப்படையாக அப்படி நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் கதிகலங்கிப் போயிருக்கிறார் என்றும் அதன் வெளிப்பாடே சீக்கிய மதகுருவின் நினைவிடத்தில் போய் மண்டியிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response