பொங்கல் பரிசு ஐந்தாயிரத்து நூற்றைம்பது கோடி – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார். பின்னர் எடப்பாடியில் உள்ள பல இடங்களுக்கு மினி வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.

இருப்பாளி என்ற இடத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு 2 கோடியே 6 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதுதவிர சனவரி 4 ஆம் தேதி முதல் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்தார். பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும். துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் சொல்லும் கணக்குப்படி தொகையாகவே ஐந்தாயிரத்து நூற்றைம்பது கோடி ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது. இது தவிர அரிசி ,சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களுக்கான தொகைக்கான செலவு தனி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response