அதிமுக பாசக கூட்டணி – அமித்ஷா சொன்ன செய்தி அதிர்ந்து நிற்கும் அதிமுக

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாசக மாநில தலைவர் முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல தலைவர்கள் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விடுதிக்கு அமித்ஷா சென்றார். பின்னர் மாலை 4.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று கூறினார். இதையே, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, விடுதிக்குச் சென்ற அமித்ஷாவை, முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து சுமார் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது தமிழக அரசு சார்பில் 3 கோரிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்தார்.

பின்னர் இருவரும் கூட்டணி குறித்தும், தமிழக தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினர். அமித்ஷா தரப்பில் 2 திட்டங்களை முன் வைத்துள்ளார். அதில் அதிமுகவும், பாசகவும் சரிபாதியாக அதாவது தலா 117 இடங்களை பிரித்துக் கொள்வது. அதிமுக தனியாகவே இந்த 117 இடங்களில் போட்டியிடலாம். பாசகவிடம் கொடுக்கும் 117 இடங்களில் பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்து விடுகிறோம். அல்லது 50 இடங்களுக்குக் குறையாமல் போட்டியிட விரும்புகிறோம். அதற்கான இடங்களை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதற்காக 60 தொகுதிகளின் பட்டியல்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு திட்டங்கள் குறித்து உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துங்கள்.
விரைவில் இதற்கான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு தேர்தல் வேலைகளை தொடங்கலாம் என்றும் அமித்ஷா கூறியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டுக்கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அமித்ஷாவின் இந்தத் திட்டத்தால் அதிமுக அதிர்ந்துபோயிருக்கிறதாம். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response