ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம், நெசவுத்தொழில் அரசுவேலை-சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்  தேனியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு  சீமான் பேசும்போது, ”130 கோடி தமிழன் இருந்தும், தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைக்குக் காரணம், இதுவரை நம் இனத்தின் தலைவன் ஒருவன் நம்மை ஆளாததே.

நான் முதல்வரானால் பாண்டியாறு-பொன்னம்புழா அணையைக் கட்டுவேன். எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை தாருங்கள் என கேரளத்தினர் கேட்டால், முல்லை பெரியாறில் எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரைக் கொடு என்று கேட்பேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மத்திய, மாநில அமைச்சர்களின் கொள்ளையடித்த பணத்தை வாங்கி மதுரை, தேனி, மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஏரி அமைப்பேன். அதற்கான தண்ணீருக்கு நீர்பாதைகளைஉருவாக்குவேன்.வேளாண்மையை தேசிய தொழிலாளாகவும், கம்பு, சோளம், குதிரைவாலியை தேசியப்பயிர்களாகவும், விவசாய தொழில் செய்து அறுபது வயதை கடந்த முதியவர்களுக்கு  உதவித்தொகை வழங்குவேன். பனை மரங்களை பெருக்கும் வகையில் பல கோடி பனை திட்டம், மண்பானை தொழிற்சாலை, நெசவு வேலையை அரசு வேலையாக்குதல், ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன். ஆடு, மாடு, தேனீ வளர்க்காமல் எப்படி பொருளாதாரம் மேம்பாடு அடையும்?

தனியார் பள்ளி, கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களைவிட, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வாக தரப்படும். எம்.எல்.ஏ, எம்.பி., ஆசிரியர் ஆகியோரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து, தடையற்ற மின்சாரத்தை கொடுப்பேன். இன விடுதலை ஒன்றையே இலக்காக கொண்டு நாங்கள் போராடி வருகிறோம்” என்றார்.

1 Comment

Leave a Response