ஃபீல்டிங்கில் ஜொலித்த சென்னை அணி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 21 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின.

சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவுக்குப் பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வரிசையில் சுனில் நரின் தடுமாறுவதால் அவர் பின்வரிசைக்குத் தள்ளப்பட்டார்.

இதையடுத்து சுப்மான் கில்லுடன் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி இறக்கப்பட்டார். கில் 11 ரன்னிலும், அடுத்து வந்த நிதிஷ் ராணா 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3 ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த சுனில் நரின், பிராவோவின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி அடித்து பின் ஆட்டமிழந்தார்.

நரின் (17 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு பக்கம் ஜடேஜா பாய்ந்து விழுந்து பிடித்தார்.எல்லைக்கோட்டைத் தொடுவதற்குள் பந்தைத் தூக்கிப்போட அதை பிளிஸ்சிஸ் கேட்ச் செய்தார்.இந்நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது.

விக்கெட் சரிவுக்கு மத்தியில் திரிபாதி நிலைத்து நின்று விளையாடி கொல்கத்தாவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். அத்துடன் ஐ.பி.எல்.-ல் தனது 5 ஆவது அரைசதத்தையும் கடந்தார். மறுபக்கம் நரினுக்கு பிறகு வந்த அபாயகரமான வீரர்கள் இயான் மோர்கன் (7 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இருவரும் விக்கெட் கீப்பர் தோனியிடம் சிக்கினர். இதனால் கொல்கத்தாவின் ரன்வேகம் சற்று தளர்ந்தது. திரிபாதி தனது பங்குக்கு 81 ரன்கள் (51 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் (17 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பிராவோவுக்கு நேற்று 37 ஆவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டு பிளிஸ்சிஸ்சும், ஷேன் வாட்சனும் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்து இவர்கள் பிரிந்தனர். பிளிஸ்சிஸ் 17 ரன்களில் (10 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டு சென்றனர். ஸ்கோர் 99 ரன்களை (12.1 ஓவர்) எட்டிய போது அம்பத்தி ராயுடு 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து தோனி வந்தார். தொடர்ந்து 2 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்த வாட்சன் 50 ரன்களில் (40 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுனில் நரினின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் வாட்சனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அவரது விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

சிறிது நேரத்தில் தோனி (11 ரன்) வருண் சக்ரவர்த்தியின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். சாம் கர்ரனும் (17 ரன்) ஏமாற்றினார். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி உருவானது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தனர்.

பரபரப்பான 20 ஆவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் கச்சிதமாக வீசி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவ் 7 ரன்னுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

6 ஆவது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 4 ஆவது தோல்வியாகும். கொல்கத்தா அணிக்கு 3 ஆவது வெற்றியாகும்.

Leave a Response