திருப்பதி கோயிலின் திடீர் அறிவிப்புக்குக் காரணம் இதுதான் – பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…

ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே அலிபிரியில் ஸ்ரீதேவி காம்ப்ளக்சில் தினமும் 3 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச தரிசன (டைம் ஸ்லாட்) டோக்கன் வழங்கப்பட்டு வந்தது, அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ரூ.300 டிக்கெட் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்புக்குக் காரணம் தமிழகம்தான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து தொடங்கவிருக்கிறது.

இதனால் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதாலும் செப்டெம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்குவதால் அப்போதும் தமிழகத்திலிருந்து வரக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதாலுமே இலவச தரிசனம் இரத்து செய்யப்பட்டிருக்கிறதாம்.

இச்செய்தி அறிந்த தமிழக ஏழை பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response