இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு

மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது.

வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும் தொடருகின்றன.

அண்மையில் கனிமொழி தன் ட்விட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா எனக் கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியனா?” என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் தமிழகத்திலிருந்து கிளம்பின. அப்படிக் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

நடிகர் கமல், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித் திருநாடு”.

என்று காட்டமாகப் பதிவு செய்திருந்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் அளித்த பேட்டியொன்றில்,

சமீபத்துல கனிமொழி எம்.பி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு.

2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி… எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா… கியா… யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன். ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்… யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி… நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.

‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்… இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. 45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க.

என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!

என்று சொல்லியிருந்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்த அறிக்கையில்,

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.

என்று சொல்லியிருந்தார்.

இப்படித் தொடர்ந்து இந்தித்திணிப்பும் அதற்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவும் நடிகர் மெட்ரோ சிரிஷும் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சட்டை போட்டு அப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தனர்.

இதை மையமாக வைத்து இந்தி தெரியாது போடா என்கிற குறிச்சொல்லைப் பயன்படுத்தி ட்விட்டரில் ஏராளமானோர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இது தமிழக மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்று சொல்கின்றனர்.

Leave a Response