சுரேஷ் ரெய்னாவுக்கு தலைக்கனம் – என்.சீனிவாசன் கருத்தால் சர்ச்சை

13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளன.செப்டெம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது.

இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவின் மாமா கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இதன் காரணமாகவே ரெய்னா விலகியதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், இது உண்மையான காரணமாக இருக்காது என்று கிரிக்கெட் வட்டாரங்களிலும், ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், ஆங்கில (அவுட்லுக்) பத்திரிகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன் அளித்த நேர்காணல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேர்காணலில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில்,

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நீங்கள் தாராளமாகப் போகலாம். நான் எதற்கும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சில நேரங்களில் உங்கள் வெற்றி தலைக்குச் சென்றுவிடும். சில கிரிக்கெட்டர்கள் பழைய நடிகர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. நிச்சயம் ரெய்னா இழக்கப்போகும் பணம் குறித்து விரைவில் புரிந்து கொள்வார்.

நான் தோனியுடன் பேசினேன். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலை கொள்ள வேண்டாம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். ஜூம் செயலி மூலம் வீரர்களுடன் நடந்த கூட்டத்தில் அனைவரையும் கவனமாக இருக்குமாறு தோனி கேட்டுக் கொண்டார். யார் மூலம் கொரோனா பரவும் என்றே தெரியாது

இவ்வாறு சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறை குறித்து வருத்தம் தெரிவித்ததாகவும், தோனியின் அறை போன்று தனக்கு வேண்டும் என்று கூறியதாகவும், இதன் காரணமாகவே ரெய்னா தற்போது விலகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பழைய நடிகர்களைப் போல் என்கிற சீனிவாசனின் விமர்சனம் விடுதி அறைச் சிக்கலோடு ஒத்துப்போவதாகப் பலரும் சொல்கின்றனர்.

Leave a Response