எம்.எஸ்.தோனிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – ஏன்?

மகேந்திர சிங் தோனி.

முடிவு செய்துவிட்டுத்தான் சென்னை வந்திருக்கிறார், மகேந்திர சிங் தோனி. விரைவில் தொடங்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டித் தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, சக ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவுடன் சென்னை வந்த தோனி, ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இன்ஸ்டாகிராமில் இரண்டே வரிகளில் அறிவித்துவிட்டார்.

“இதுகாறும் என் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவளித்தவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இன்றிரவு 7.29 மணித்துளி முதல் நான் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்.”

தோனியுடன் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றிருக்கிறார். தோனியை “தல” என்றும் சுரேஷ் ரெய்னாவை “சின்ன தல” என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. இருவரும் முடிவெடுத்துவிட்டுத்தான் சென்னை வந்தோம் என்று ரெய்னா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

அதுசரி. ஏன் ஆகஸ்ட் 15-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, “தோனியின் ஆட்டச் சீருடை எண் 7. என்னுடையது 3. இரண்டும் சேர்ந்தால் 73. இந்தியா சுதந்திரமடைந்து இன்று 73 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆக, இதைவிட, எங்கள் ஓய்வை அறிவிக்க சிறந்த நாள் இருக்க முடியாது என்று கருதினோம்.” எனப் பதிலளித்திருக்கிறார் ரெய்னா.

39 வயதே நிறைந்த தோனியின் ரசிகர் பட்டாளம் பரந்து விரிந்தது. சமூக ஊடகங்களில் அவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர் குழுக்கள். உணர்ச்சிப் பெருக்குடன் லட்சக்கணக்கில் பதிவுகள், கோடிக்கணக்கில் விருப்பக்குறிகள். தோனியின் ஓய்வு சார்ந்த ரசிகர்களின் பொதுவெளி உரையாடல் இன்னும் தணியவில்லை.

இந்தியாவுக்கு முதன்முதலில் உலகக் கோப்பையை (1983) வென்று தந்தவர் கபில்தேவ். அதன் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை (2011) மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த பெருமை தோனியை சாரும். சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) 3 கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பதில் தொடங்கி, தோனியின் தனிப்பெருமை நீண்ட பட்டியலுக்கு உரியது. அவர் புள்ளிவிவரங்களுக்கு அப்பாற்பட்டவர். வெறுமனே ரன்களின் எண்ணிக்கையாலோ அல்லது வெற்றிபெற்ற ஆட்டங்களின் எண்ணிக்கையாலோ மட்டும் அவரை அளந்துவிட முடியாது. அவற்றையெல்லாம் கடந்தவர், தோனி.

பிரமதர் நரேந்திர மோடி இரண்டு பக்க புகழாரக் கடிதத்தை தோனிக்கு அனுப்பியிருக்கிறார். தோனி, வெற்றிகளைக் குவித்த கிரிக்கெட் ஆட்டக்காரர் மட்டுமல்ல, “புதிய இந்தியாவின் எழுச்சிய நாயகன். கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் ஈர்ப்பு சக்தி” என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். அதிரடி ஆட்டம் மற்றும் உத்தி வழியாக ஆட்டத்தின் போக்கையே மாற்றி இலக்கை எட்டும் தோனிக்கே உரிய தனிப் பாணியைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். இந்திய வரலாற்றில் தோனி ஒரு பெரும் நிகழ்வு என்ற பொருள்படவும் அக்கடிதத்தில் பாராட்டுரைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

தோனியைப் பொருத்தவரையில் மோடியின் கூற்று சரிதான். இந்தியக் கிரிக்கெட்டில் பொதுவாக “மும்பை வட்டத்தின்” அழுத்தமும் ஆதிக்கமும் அதிகம். மும்பையைச் சார்ந்த வீரர்களுக்கு, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு அதிகம். மும்பை வீரர் என்றால் “அசோகர் உங்க மகரா!” என்ற பாணியில் வியந்தோம்பல் வரவேற்பு கிடைக்கும். (“காதலிக்க நேரமில்லை” படம் பார்த்தவர்களுக்கு இது புரியும்). அத்துடன் “தேர்வுக்குழு அரசியல்” எப்போதும் விவாதப் பொருளாக இருந்துவருவதை கிரிக்கட் ரசிகர்கள் அறிவார்கள்.

இவ்வாறான தடைகளையெல்லாம் முறியடித்து அணியில் இடம்பெற்று இந்தியாவுக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்தவர் ஹரியானாவிலிருந்து புறப்பட்ட கபில் தேவ். அவருக்குப் பிறகு, அன்றைய பிகார் – இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலிருந்து புறப்பட்டவர் மகேந்திர சிங் தோனி.

தோனியை அதிரடி மன்னன், அமைதிப் பூங்கா என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். உண்மையிலேயே அதற்குரியவர். அரசியல் பாணியில் சொல்வதானால், அவர் “நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்.” அவர் இந்திய அணியில் நுழைந்த காலத்திலிருந்து இப்போது வரை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்களுக்கு இது புரியும். இல்லையெனில், சமீபத்தில் மறைந்த இளம் ஹிந்தி நடிகர் சுஷாத் சிங் ராஜ்புத் நடித்த “MS Dhoni: The Untold Story” என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஓரளவு புரியக்கூடும். தமிழில், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான “ஜீவா” படத்தைப் பார்த்தவர்களுக்கு கிரிக்கெட் அரசியல் பற்றிய ஒரு கண்ணோட்டம் கிடைக்கலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் எடுத்த முடிவுகளுக்காக மூன்றுமுறை தோனியின் வீடு மீது கல்வீச்சு நடந்திருக்கிறது. இதுபோன்று பலநிலைகளில் அவர் காயப்படுத்தப்பட்டிருக்கிறார், மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்றுகொடுத்த பிறகும்.

தோனிக்கு முன்னாலும் தோனியுடனும் விளையாடிய பல முன்னணி ஆட்டக்காரர்கள் திறமையானவர்கள். சந்தேகமில்லை. தனிக்கணக்கு என்று வரும்போது அவர்கள் மாஸ்டர்கள்தான். சந்தேகமேயில்லை. ஆனால் அணிக் கணக்கு என்று வந்தால், அவர்கள் பெவிலியனில் குளிர்பானம் அருந்த வேண்டியதிருக்கும்.

கள அழுத்தத்துக்கு நிலைகுலையாமல் எப்போதும் உணர்வுகளை நெறிப்படுத்த வல்லவர், தோனி. “கேப்டன் கூல்” என்று அவர் கொண்டாடப்பட்டதற்கு காரணம் இதுதான்.

சமூகத்தின் மேல்மட்டத்திலேயே அதிகம் மையம் கொண்டிருந்த கிரிக்கெட்டை மக்கள்மயமாக்கியவர் கபில்தேவ். அவருக்குப் பிந்தை இன்னும் வேகமான நீட்சி, தோனி. வளர்ந்த நகரங்கள், பெருநகரங்கள் கடந்து, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள் எனப் பரவலாக கிரிக்கெட் ஆர்வத்தை தீவிரப்படுத்தியதில் தோனிக்குப் பெரும் பங்குண்டு.

ஆட வந்த புதிதில், நீண்ட தலைமுடியுடன் “காட்டான்” மாதிரி ஆடுகிறார்; ஆட்டத்தில் நளினம் அதாவது ஸ்டைல் இல்லை என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆடுகளத்திலும் அதுகடந்தும் தனது அசாத்திய செயல்களால் இத்தகைய விமர்சனங்களை தூளாக்கினார்.

ஆடுகளத்துக்கு வெளியிலும் தோனி இயல்பான மனிதனாக வெளிப்பட்டவர். மற்ற கிரிக்கெட் வீர்ர்கள் பெரும்பாலும் அவ்வாறு காணக் கிடைக்க மாட்டார்கள். தோனி தனது மகளின் காலை மண்ணுக்குள் புதைத்து விளையாடும் காட்சி சமூக ஊடகங்களில் மிகப் பிரபலம். அதைப் பார்க்கும்போதெல்லாம் நா. முத்துக்குமார் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய்….” என்ற பாடல்தான் என் நினைவுக்கு வரும். தோனி அப்பா!

“அவர் வெளியே தள்ளப்படுவதற்கு முன்பே வெளியேறுவது நல்லது. தோனியைக் கடந்து நாம் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. நான் ஒரு அணியை அமைத்தால் அதில் நிச்சயமாக தோனிக்கு இடமிராது” என்று தேசியத் தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார், புகழ்பெற்ற முன்னாள் இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரரான சுநீல் காவஸ்கர். ஒரு மூத்த ஆட்டக்காரர், இந்தியாவுக்கு அடர்த்தியாகப் பெருமை சேர்த்த ஓர் அணித் தலைவனை எவ்வாறு வழியனுப்ப நினைக்கிறார்… சற்றே சிந்தியுங்கள் மக்களே.

“இந்தியாவில், காவஸ்கர் மற்றும் கும்ப்ளே தவிர எந்தக் கேப்டனும் கண்ணியமான முறையில் நடத்தப்பட்டு ஓய்வுபெறவில்லை. கபிலுக்குக்கூட அந்த வாய்ப்பில்லை” என்று நாடறிந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரரான சேத்தன் சர்மா கூறியிருப்பதை இவ்விடத்தில் இணைத்து நோக்கலாம்.

2004-ல் தான் ஆடிய முதல் சர்வதேச ஒருதின ஆட்டத்தில் (வங்கதேசத்துக்கு எதிராக) தோனி ரன் அவுட் ஆனார். அதேபோல் கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரன் அவுட் ஆனார். இது அவரது கடைசி ஒரு தின ஆட்டம். அவர் ஆட்டமிழந்த நேரம் 7:29 மணித்துளி. அதனால்தான் அதே நேரத்தில் தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார் என்று ஒரு ரசிகர் சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார். இதன் உண்மைத் தன்மையை ஆராய அவசியமில்லை. ஆனால், தோனியை ரசிகர்கள் எந்த அளவுக்கு கூர்ந்து அவதானிக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

மற்றவர்கள் போல, இளம் வயதிலிருந்தே முறையான பயிற்சியாளரால் செதுக்கப்பட்டவர் அல்ல தோனி. டென்னிஸ் பந்தைக் கொண்டு கிரிக்கெட் ஆடியவர். எப்படியாவது கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்தவர். பல தடைக்கற்களைக் கடந்துதான் அவர் விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதை நாம் தனிக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கபில்தேவுக்கு பிறகு, ராணுவத்தில் “கௌரவ லெப்டின்ட் கர்னல்” பதவி அளித்து இந்திய அரசு தோனியை பெருமைப்படுத்தியது.

அவரது உயரத்துக்கு நிகரான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் குமுறல்.
விளையாட்டுத் துறையில் “பாரத ரத்னா” விருது பெற்ற ஒரே இந்திய ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். ஓய்வு பெற்றவுடன் 40 வயதில் அவர் நாட்டின் முதன்மைப் பெருமையைப் பெற்றார். கபில்தேவ் இன்னும் பெறவில்லை.

கபிலுக்கும் தோனிக்கும் ஒரே சமயத்தில் இந்த விருதை அளித்தால், இந்திய வரலாறு சிறப்பாக அலங்கரிக்கப்படும்.

– இளையபெருமாள் சுகதேவ்

Leave a Response