மருத்துவமனையில் ஓபிஎஸ் – நேரில் சென்று பார்த்த இபிஎஸ்

நேற்று (மே 24) மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பல்வேறு செய்திகள் உலவின. இந்நிலையில், துணை முதல்வர் நலமாக இருப்பதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி வெளியீட்டில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டதில் அவர் உடல்நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை துணை முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மதியம் இரண்டு மணியளவில் மருத்துவமனையில் ஓபிஎஸ்ஸை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்று 25.5.2020 சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன்.

என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதனால், மாலையில் வீட்டுக்கு வரவிருப்பவரை மதியம் இவர் போய்ப் பார்த்தது ஏன்? என்று சிலர் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response