காவல்துறையின் அத்துமீறலை மக்கள் சகிக்க மாட்டார்கள் அதனால்.. – கொளத்தூர் மணி சொல்லும் 6 யோசனைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித விவரம்…..

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சில செய்திகளை உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

கொடூரமான கொரோனோ தொற்றுக்காக மக்களுக்கு சிகிச்சை அளிக்க, நோய்ப் பரவலைத் தடுக்க, பாதுகாக்க அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க, உள்ளடங்கி இருப்பதுவும் பாதுகாப்பு இடைவெளியோடு இருப்பதுவும் தேவை என்பதைப் பரவலாகப் பரப்பி அதற்காக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது முடியும் நிலையில் நாம் இருக்கிறோம். ஒருவேளை நடப்பு நிலை கருதி மேலும் ஒருமுறையோ, சிலமுறையோ இந்த ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற நிலையில்தான் அதுகுறித்த சில முன்மொழிவுகளை உங்கள் முன் வைப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருள்கள் வாங்கவும், உடல்நலம் கருதி மருத்துவமனை செல்லவும் அனுமதிக்கிற உரிமையும் மேற்பார்வையும், அதிகாரிகள், காவல்துறையினர் தவிர வேறு எவர் ஒருவரும் பங்கேற்காத நடைமுறைகள்தான் இவ்வளவு காலமும் இருந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களோ, சமூக அமைப்புகள் இயக்கங்களைச் சார்ந்தவர்களோ, சமூக அக்கறையுடன் இயங்கும் தன்னார்வலர்களோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ யாரும் பங்கேற்காத போக்குதான் இதுவரை இருந்துவந்திருக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த இந்த 21 நாட்களில் தாங்களாகவே உள்ளடங்கியும், மிக அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பெரும் இடையூறுகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெளியே சென்று வந்து கொண்டும், அப்போதெல்லாம் தங்களுக்கு நேரும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டுமிருந்த பொதுமக்கள், குறிப்பாக வளர் இளம் பருவத்தினரும் இளைஞர்களும் தொடர்ந்தும் அப்படியே இருப்பார்களா என்பது ஐயத்துக்கு உரிய ஒன்றாகவே எங்கள் மனதிற்குப் படுகிறது.

காரணம் நோய்ப்பரவலைத் தடுக்கவும், நோய்ப்பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புகள் அனைத்தும் அரசுத்துறைகளிடமும் குறிப்பாக காவல்துறையிடம் மட்டுமே முற்றுமுழுதாக சுமத்தப்பட்டதால், தங்கள் பணிகளுக்காக திறந்த வெளிகளில், சாலைகளில், புழுதியையும், புழுக்கத்தையும், வெப்பத்தையும் தாங்கி ஓய்வுமில்லாமல் நிற்கவேண்டிய நிர்ப்பந்த சூழலில், சில நேரங்களில் அத்துமீறி நடப்பது நிகழத்தான் செய்தது. சிலர், சில காவல் துறையைச் சார்ந்தவர்கள் அத்துமீறி பல விஷயங்களில் நடந்து கொண்டார்கள். பொதுமக்களில் சிலர் நடந்துகொண்ட கட்டுபாடற்ற நடவடிக்கைகளுக்காக, பொறுமையிழந்து, நிதானம் இழந்து உரிய விசாரணைகூட செய்யாமல் அனைவரையும் தோப்புக் கரணம் போடச் செய்தல், நாற்காலியில் உட்காருவதைப் போல நிற்கச் செய்தல்,

வாகனங்கள்மீது சாயத்தைப் (Paint) பூசிவிடுதல் போன்ற பல அத்துமீறல்கள் சகித்துக் கொள்ளப்பட்டதால்தான் இதுவரை சமூக அமைதி குலையாமல் இருந்துவந்திருக்கிறது. ஆனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படால் அதே அமைதியான போக்கு தொடருமா என்பது ஐயத்துக்கு உரியதுதான்.

ஏற்கனவே பொறுமை இழந்துள்ள பொதுமக்களும் உளவியல் அழுத்தத்தில் உள்ள இந்த சூழலில், அத்துமீறலுக்கு எதிரான நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே நாங்கள் அஞ்சுகிறோம்.

இந்த பதட்டத்தைத் தணிக்க ……

i) கடைகள் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் திறந்திருப்பதேகூட மக்கள் கூட்டம் சேர்வதற்குக் காரணம் ஆகிவிடுகிறது. உரிய இடைவெளி என்பதை மட்டும் நிபந்தனையாக்கி கண்காணிக்கச் செய்து மக்களை கடை வீதிகளுக்கு அனுமதிப்பதும்,

ii) ஆதரவற்றோருக்கு உணவு வழங்க விரும்புவோருக்கும், அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பவர்களுக்கும் எப்போதும் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அலுவலர் வழியாக அனுமதிச் சீட்டு வழங்கச் செய்வதும்,

iii) விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருள்களை, குறிப்பாக காய்கறிகளை உரிய கட்டுப்பாடுகளுடன் விற்க அனுமதிப்பதும்,

Iv) உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடியை அனுமதிப்பதும்

v) தினக்கூலிகளுக்கு உரிய நிவாரணம் தருவதும்,

vi) கேரளாவில் அமைக்கப்பட்டிருப்பதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளோ, பொதுமக்கள் நன்கொடையிலோ, சமூக சமையலறைகளை நிறுவி, குடும்பம் இல்லாமல் சிக்கித்தவிக்கிற அரசு, தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் தடையின்றி உணவு கிடைக்கச் செய்வதும் மிகவும் தேவையானவை எனக் கருதுகிறோம்.

இவற்றுக்கு, மாநில அளவிலும், மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிராம அளவிலும் அதிகாரிகளோடு, மக்கள் தொடர்பிலும், மக்களின் அபிமானத்தோடும் உள்ள, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூக அக்கறையுள்ள நபர்கள் ஆகியோரின் கூட்டுப் பொறுப்போடும், பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் செய்வது மட்டுமே உரிய பயனை விளைவிக்கும் என்று கருதுகிறோம்.

அருள்கூர்ந்து எங்கள் முன்மொழிவுகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response