
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியில் காவல்துறையினர் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடைவீதியில் கோழிக்கடை நடத்திவரும் அப்துல் ரகீம் (வயது 75) என்பவர் கோழி இறைச்சி விற்பனை செய்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் வியாபாரம் செய்யாமல் கடைமுன் உட்கார்ந்திருந்தார் என்று அவரது உறவினர்கள் சொல்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், கடையை அடைக்கும்படி கூறி அவரை எச்சரித்துள்ளனர். அப்போது அவரது உறவினர் ஒருவர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் காவல்துறை அந்த நபரை தாக்கியதாகவும், இதனைத் தடுக்க முயன்ற அப்துல் ரகீமையும் காவல்துறை தாக்கியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அங்குள்ள பிரதான சாலையில் அப்துல் ரகீமின் உடலை ஒரு காரில் வைத்து, அந்த காரை நடுரோட்டில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரகீம் இறப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் ஃபரூக் எழுதியிருக்கும் பதிவில்…
நெஞ்சம் பதைபதைக்கிறது!
தோழர் Rabeek Raja அவர்களின் தந்தை காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவர் தாக்குதலினால் மரணமடையவில்லை, அதிர்ச்சியில் கீழே விழுந்து மரணமடைந்தார் என அவரின் குடும்பத்தினரிடம் மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும்,இருபது பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்ற போலீஸ் அறிவுரைத்தலின் படி அவரின் அடக்கம் நடக்க இருப்பதாக மதுரையில் உள்ள தோழர் MT பாண்டியன் அவர்கள் மூலம் அறியமுடிகிறது.
எல்லா முற்போக்கு அமைப்பு தோழர்களும் காவல்துறையை கண்டித்து போராடும் நிலையில் இருந்த போதும்,தோழர் ரபீக் அவர்களின் குடும்பம் காவல் துறையை எதிர்த்து நிற்பதற்கு தயாராக இல்லை .
அடுத்தடுத்து காவல்துறையால் இரண்டு மரணங்களை சந்தித்த,வேறு எந்த பின்புலமும் இல்லாத
ஒரு ஏழை இசுலாமிய குடும்பம் வேறு என்ன செய்ய முடியும் ? எத்தனை நாளைக்கு போலிஸ் அதிகாரத்துடன் எதிர்த்து நிற்க முடியும் ?
குடும்பத்தை வழி நடத்தும் பெரியவர்கள் என யாரும் இல்லை ,தோழர் ரபீக் அவர்களும் சென்னையில் பணி புரிகிறார். எஞ்சியிருப்போர்களின் வாழ்க்கையையும் வழக்கு ,மிரட்டல்கள் என சந்திக்க வேண்டியிருக்கும் என அஞ்சியே இந்த முடிவுக்கு வந்ததாக அறிகிறோம்.
மனச் சோர்வுடனும்,இயலாமையடனும் தான் எளியவர்களின் வாழ்க்கை தொடர வேண்டியிருக்கிறது !
நீதி என்னும் நெடும் பயணத்தை இசுலாமியர்களால் ஒருபோதும் கடந்து வென்றிட முடியாது!
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


