தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இருந்து ஆயிரகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியதாவது:-
மொத்தம் 1,548 பேர் மார்க்கஸிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. நாங்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறிகளைக் காட்டாத 1,107 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,
இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு துணை நிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதி உள்ளது, அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தப்லீக் ஜமாஅத் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்….
மர்கஸ் நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச தலைமையகமாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. உலகமெங்கும் யாத்ரீகர்கள், பக்தர்கள், பயணிகள் இந்த இடத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருகையையொட்டி, பங்கேற்பை உறுதி செய்து நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படுபவை.
மாண்புமிகு பிரதமர் மார்ச் 22, 2020 அன்று ‘மக்கள் ஊரடங்கு’ அறிவித்த உடன், மர்கஸ் நிஜாமுதீனில் நடந்து வந்த நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது, இருப்பினும் 2020 மார்ச் 21 அன்று நாடு முழுவதும் ரயில் சேவைகளை திடீரென இரத்து செய்ததால், ரயில் வழியாக வந்திருந்த ஒரு பெரிய குழு மர்கஸ் வளாகத்தில் சிக்கிக் கொண்டது.
மார்ச் 22, 2020 அன்று, “மக்கள் ஊரடங்கு” அனுசரிக்கப்பட்டது, அதன்படி பார்வையாளர்கள் மாண்புமிகு பிரதமரின் உத்தரவின்படி இரவு 9 மணி வரை வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ரயில்வே தவிர வேறு வழிகளில் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியவில்லை. மக்கள் ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணிக்கு முடிவடைவதற்கு முன்னர், மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் டெல்லி முழுவதும் 2020 மார்ச் 23 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி 2020 மார்ச் 31 வரை Lock Down செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் வந்திருந்தவர்கள் சாலை போக்குவரத்து மூலமாக வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்தது. இதுபோன்ற சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், மர்கஸ் நிர்வாகத்தின் உதவியுடன், சுமார் 1500 நபர்கள் மர்கஸ் நிஜாமுதீனை விட்டு வெளியேறினர்.
பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பின் இங்கு தங்கியிருந்த பலருக்கும் வெளியே செல்ல இடமில்லாததால், இங்கு தங்கவைத்தோம். அவர்களுக்குப் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
கடந்த 24-ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து எங்கள் மையத்தை மூட சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பில் இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.மேலும், 17 வாகனங்கள், அதன் பதிவு எண், ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் விவரம் உட்பட அனைத்தையும் காவல் நிலைய அதிகாரிக்குக் கடிதம் மூலம் தெரிவி்த்திருந்தோம். அந்த வாகனங்களை இயக்க அனுமதியளித்தால் இங்கு சிக்கியிருக்கும் மக்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள் எனத் தெரிவித்தோம். ஆனால், இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை.
மார்ச் 25, 2020 அன்று, தாசில்தார் அவர்கள் மருத்துவ குழுவுடன் மர்கஸுக்கு விஜயம் செய்தார். அவரின் ஆய்வுக்கும் பார்வையாளர்களின் பட்டியலைத் தயாரிப்பதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அவர்களில் பலர் மருத்துவர்களால் முழுவதும் பரிசோதிக்கப்பட்டனர்.
26 மார்ச் 2020 அன்று, SDM (Sub Divisional Magistrate) மர்க்கஸ் நிஜாமுதீனைப் பார்வையிட்டார், மேலும் எல்.டி.யுடன் மேலதிக சந்திப்புக்கு எங்களை அழைத்தார். SDM (Sub Divisional Magistrate)யை சந்தித்தோம். மேலும் சிக்கித் தவிக்கும் பார்வையாளர்களைப் பற்றி அவருக்கு விளக்கினோம். நாங்கள் ஏற்பாடு செய்த வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி கோரப்பட்டது.
அடுத்த நாள், அதாவது 2020 மார்ச் 27, ஆறு பேர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பின் மார்ச் 28, 2020, இங்கு வந்த மருத்துவர்கள் குழு, இங்கிருந்த 33 பேரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் போலீஸார் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கும் பதில் அனுப்பியுள்ளோம்’’.
நேற்று, மார்ச் 30, 2020 அன்று, சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது, COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் மர்க்கஸில் இருப்பதாகக் கூறப்பட்டது. சில மரணங்கள் இதே காரணமாக நிகழ்ந்துள்ளன என்றும் பரப்பப்படுகிறது. எதிர்பாராத விதமாக, டெல்லியின் மாண்புமிகு முதலமைச்சர், மர்கஸின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகக் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியது.
மேற்சொன்ன தகவல்களை மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்த முனைந்திருந்தால், அதிகாரிகள் தாங்கள் மர்கஸிற்கு வந்ததையும் மீதமுள்ள பார்வையாளர்களை திரும்ப அனுப்புவதற்காக மர்கஸால் நீட்டிக்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவருக்கு அறிவித்திருப்பார்கள் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறோம். இந்த முழு அத்தியாயத்தின் போது, மர்கஸ் நிஜாமுதீன் ஒருபோதும் எந்தவொரு சட்ட விதிகளையும் மீறவில்லை. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த பார்வையாளர்களிடம் ஹஜ் எப்போதும் இரக்கத்துடன் செயல்பட முயன்றோம்.
தற்போதைய ஹஜ் தொற்றுநோய்களின் சவாலை முறியடிக்க உதவும் நோக்கத்துடன் மர்கஸ் நிஜாமுதீன் முழு வளாகத்தையும் தாழ்மையுடன் வழங்க விரும்புகிறோம். மர்கசின் 100 ஆண்டுகால செயல்பாட்டில் நிர்வாகம் / அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, சட்டத்தை நிலைநிறுத்தும் ஒரு களங்கமற்ற வரலாற்றை மர்கஸ் நிஜாமுதீன் கொண்டுள்ளது. COVID-19 இன் தற்போதைய சவாலில், மர்கஸ் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கும். மேலும் அவர்கள் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்பதை கூறிக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.