கோகுல்ராஜ் படுகொலை -பியூசிஎல் கண்டனம்.

23.6.2015 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் இரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கோகுல்ராஜ் (வயது-21). திருச்செங்கோடு அருகிலுள்ள கே.எஸ்.ஆர் தனியார் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். என்பதும், அவர் ஆதிதிராவிடர் சாதியை சார்ந்தவர் என்பதும் அவர் தன்னுடன் அதே கல்லூரியில் படித்த சுவாதி என்ற கொங்குவேளாளர் சாதியைசார்ந்த பெண்ணுடன் திருச்செங்கோடு கோயிலுக்கு சென்ற போது கொங்குவேளாளர் சாதிய, தீரன் சின்னமலை பேரவை சமுதாய இந்து அமைப்பைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், நான்கு பேருடன் சேர்ந்து கோகுலைக் கடத்திச் சென்று பின் படுகொலைசெய்துள்ளார்கள்.. பின்னர் அந்த கொலையினை தற்கொலை என்பது போல காட்ட இரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் தள்ளப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக சுவாதி என்ற பெண் காவல்நிலையத்தில் வாக்குமுலம் கொடுத்துள்ள நிலையிலும் மேலும் திருச்செங்கோடு கோயிலிருந்து கடத்தப்படுவது வீடியோ பதிவாகி உள்ள நிலையிலும் போதிய ஆதாரங்கள் இருந்த போதும் காவல்துறை குற்றவாளிகளை கைது செய்வதில் ஒரு மென்மையான போக்கை கடைபிடிக்கின்றது. தொடர்ந்து தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியைச்சார்ந்த காதலர்கள் சாதி ஆதிக்க கொடூரத்தால் படுகொலைகள் செய்யப்படுவது தொடர்கின்றது. இந்த அகெளரவகொலைகளைசெய்தவர்கள் ஒரு குடும்பத்திருந்தும் சாதி குழுக்களாய் இணைந்து இந்த கொடுமைகளை செய்கின்றனர். சாட்சிகள் பெரும்பாலும் விசாரணை சமயம் பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டு விடுதலை அடைந்து வெளியேறுவதால் தொடர்ந்து குழுக்களாக இந்த கொடூரங்களை துணிந்து செய்கின்றனர். தமிழகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காதலர்கள் இந்த (அ)கெளரவக்கொலைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இந்த கொடுமையை தடுக்க முன் வராது ஒரு மென்மையான போக்கை குற்றவாளிகளுக்கு எதிராக கடைபிடிக்கின்றது. பிரச்சனை அதிகரிக்கும் போது ஒரு சில கைதுகளை காட்டிவிட்டு இதன் பின்னனியில் உள்ள சாதி ஆதிக்க சக்திகளை பாதுகாக்கின்றது. ஏற்கனவே இந்த சாதி கெளரவக்கொலைகளை தடுக்க . வேண்டி உச்சநீதிமன்றம் நிறைவேற்றக்கோரிய திருமண உறவுகளில் சட்டவிரோதமாக தலையீடு செய்வதை தடுக்கும் சட்ட முன் வடிவு ( Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) Bill, 2011 ) இதுவரை பாராளுமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும் இந்த கொடுமைகளைத்தடுக்க எந்த முயற்சியுமில்லை.அரசியல் கட்சிகள் இது பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்பது அவலம். இந்த படுகொலைகள் நமது நாகரீக சமூகத்தை பின்னுக்குத்தள்ளுகின்றன. சனநாயக பண்புகளை சூறையாடுகின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சர்வதேச சட்டங்கள் மற்றும் அரசியமைப்பு சட்டத்திற்க்கு எதிரான செயல்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் இந்த கெளரவக்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு பின் உள்ள சாதிய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு திருமண உறவுகளில் சாதிய கும்பல் தலையீடு செய்வதை தடுக்க உரிய சட்டம் கொண்டுவரவேண்டும்.

ச.பாலமுருகன், மாநிலச்செயலர், பேரா.சரஸ்வதி, மாநிலத்தலைவர் தலைவர்
மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) தமிழ்நாடு மற்றும் புதுவை

Leave a Response