நெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து மத்திய உளவுத்துறை நேற்று முன் தினம் மதியம் 2 மணி அளவில் தமிழகக் காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை இ-மெயில் மூலம் அனுப்பியது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இந்துக்கள் போன்று மாறுவேடமிட்டு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நுழைந்திருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்துக்களைப் போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் அவர்கள் மாறுவேடத்தில் இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த பயங்கரவாதக் குழு கோவையில் இருக்கிறது.

முக்கிய மத வழிபாட்டுத் தலங்கள், வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வரும் சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கு அந்தப் பயங்கரவாதக் குழு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

மேலும் முக்கிய பாதுகாப்புத் துறை அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், மத்திய-மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.

இதேபோல் இந்து மதத் தலைவர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களையும் இலக்காக நிர்ணயிக்கக்கூடும். எனவே அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுண்ணறிவு பிரிவின் செயல்பாடுகள் உடனடியாக ‘உஷார்’ நிலையை அடையவேண்டும்.

ஊடுருவியவர்கள், மர்ம நபர்களின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இதேபோல சட்ட விரோதமாக படகுகளில் ஊடுருவல்காரர்கள் நகர்வு இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்தத் தகவலை மீனவர்களுக்கு அதிகாரிகள் குழு தெரிவித்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கச் சொல்ல வேண்டும்.

உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்து விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வகையில், பயங்கரவாதிகள் இலக்காக நிர்ணயித்துள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Response