அணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. அவ்வமைப்பின் முன்முயற்சியில் சென்னையில்
ஜூன் 15 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த விவரங்கள்…..

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான ஆழ்நில கரூவூலம் (Deep Geological repository) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பது.

“7. DGR has to be set up at the earliest so that SNF could be transported from the nuclear plant to DGR. NPCIL says the same would be done within a period of five years. Effective steps should be taken by the Union of India, NPCIL, AERB, AEC, DAE etc. to have a permanent DGR at the earliest so that apprehension voiced by the people of keeping the NSF at the site of Kudankulam NPP could be dispelled.”

இதில் நாம் குறிப்பிட்டு பார்க்க வேண்டியது, அணுக்கழிவுகளை அங்கேயே வளாகத்திற்குள் வைக்கக்கூடாது என்பதுதான். ஆனால் 2014 “ஆழ்நில கருவூலம்” அமைப்பது தாமதமாகும் என்று சொல்லி “AFR” அமைக்க முடிவு செய்தது.

உச்சநீதிமன்றம் கொடுத்த 5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR வடிமைமைப்பதிலுள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என்றும் அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில் இதைப்போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல்முறையாக கூடங்குளத்தில் உள்ளதால் இதுமிகவும் சவாலான பணியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள 2 உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதால். இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டு AFR மற்றும் DGR வசதிகளை ஏற்படுத்தி முடிக்கும் வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். கூடங்குளம் அணுவுலையில் உள்ள Fuel Pool அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் தேசிய அணுமின் கழகம் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022க்குள் AFR கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாக “கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே” “Away From Reactor” வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குள் நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்.

கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாட்டாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான முயற்சிக்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் உண்டான பாதிப்புக்கள்தான் அதிகம். அணு உலை கழிவுகளை கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளும் கட்சிகள், அமைப்புக்கள் சார்பாக கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்:

1) நிரந்தரக் கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், AFR திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை ரத்து செய்யவேண்டும்.

2) கூடங்குளத்தில் மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதைக் கைவிடவேண்டும்.

3) ஏராளமான பிரச்சினைகள், குழப்பங்களுடன் தத்தளிக்கும் கூடங்குளம் அணுஉலையின் முதல் இரண்டு அலகுகள் குறித்த சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

4) போராடிய மக்கள்மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளுக்காக ஜூன் 25, 2019 அன்று நெல்லையில் அணுக்கழிவு திட்டத்திற்கு எதிராக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள்:

ஆர். நல்லகண்ணு, சிபிஐ.
திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
ஆர். எஸ். பாரதி,நா.ம.உ. தி.மு.க.,
ஞானதிரவியம், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.,
வீரபாண்டியன், சிபிஐ
ஆறுமுக நயினார், சிபிஐ (எம்)
அந்தரிதாஸ், மதிமுக
பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி,
தெஹ்லான் பாகவி, SDPI கட்சி,
வெற்றிவேல், அ.ம.மு.க
வேணுகோபால்,தமிழக வாழ்வுரிமை கட்சி

Leave a Response